சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் செயல்படும் சூரிய மின்சக்தி நிலையங்கள், மின்னாற்றல் சேமிப்பு அமைப்புகள் போன்றவை ஒன்றிணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் மின்னாற்றல் தேவைகளைத் திறம்படக் கையாள முடியும்.
மெய்நிகர் மின்னாற்றல் நிலையத்தை (விபிபி) உருவாக்குவதன் மூலம் இது சாத்தியமாகும் என்றும் மின்தொகுப்புக்கு மிகுந்த நெகிழ்வுத்தன்மை, அளவீட்டுத் தன்மை ஆகியவற்றை இது வழங்கும் என்றும் ஆற்றல் சந்தை ஆணையம் (இஎம்ஏ), செம்ப்கார்ப் நிறுவனம் ஆகியவை இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
துய்மையான ஆற்றல் மூலங்களான சூரிய சக்தி போன்றவை சிங்கப்பூரின் ஆற்றல் வளங்களுடன் ஒருங்கிணைக்கப்படவும் இது வழிவகுக்கும்.
சிங்கப்பூரின் முதல் மெய்நிகர் மின்னாற்றல் நிலையத்தை உருவாக்குவதற்கு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு இஎம்ஏ, செம்ப்கார்ப் ஆகியன இணைந்து நிதியுதவி ஒன்றை அளித்துள்ளன. இந்தத் திட்டம் 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் ஆற்றல் துறையில் புதிய திறன்களை மேம்படுத்துவதற்காக இஎம்ஏ, செம்ப்கார்ப் ஆகியன இணைந்து மேற்கொண்ட $10 மில்லியன் அளவிலான பங்காளித்துவத்தின் அங்கமாக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மெய்நிகர் மின்னாற்றல் நிலையத்தை அமைப்பதன் மூலம் சூரிய மின்சக்தி கிடைக்கும்போது ஏற்படக்கூடிய ஆற்றல் ஏற்ற இறக்கங்கள் தன்னிச்சையாகவே சமன்படுத்தப்படும். சிங்கப்பூரின் ஆற்றல் தேவைகளை முன்னுரைக்கும் வசதிகளும் இதில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


