பிரதமர் லீ: நல்லதோர் அரசாங்கமே நோக்கம்

மக்களின் மரியாதையைப் பெற்று, அவர்களுக்கு நல்ல அரசாங்கத்தை வழங்கும், சிங்கப்பூருக்கு ஏற்ற வகையில் செயல்படும் அரசியல் அமைப்பு முறையை சிங்கப்பூர் அடுத்த 10 அல்லது 20 ஆண்டு வரையிலும் கொண்டிருக்கும் என்று பிரதமர்  லீ சியன் லூங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  ஆற்றல்மிக்க, கடப்பாடுகொண்ட, வாக்குறுதிகளை நிறைவேற்றும் தலைமைத்துவத்தை உருவாக்குகிறதா என்பதே அரசியல் அமைப்பு எதிர்நோக்கும் முக்கிய சவால் என திரு லீ கருதுகிறார்.

“நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியனருக்கும் இடையே எண்ணிக்கையில் சமநிலை இருக்கிறதா என்பது பற்றியதல்ல இது. ஆனால் சிங்கப்பூரை சிறப்பான முறையில் ஆட்சிசெய்வதற்காக செயல்படுகிறதா என்பது பற்றியது,” என்றார் அவர்.

கடந்த மாதம் நியூயார்க் சென்றிருந்த பிரதமர் லீ, அங்கு சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சிங்கப்பூர் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த தொகுப்பாளர் ஃபரீட் ஸகாரியாவின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். 

பிரதமரின் நேர்காணல் சிஎன்என் இணையத்தளத்தில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. சிங்கப்பூரின் அரசியல் அமைப்பைப் பார்த்து பலரும், அது நியாயமற்ற முறையில் ஆளும் கட்சிக்குச் சார்பானதாக இருக்கிறது எனக் கூறுகின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில், சிங்கப்பூர் அதிக சமநிலையான இரு கட்சி ஆட்சி முறை அல்லது அதிக வெளிப்படையான ஜனநாயக அமைப்பைப் பெற்றிருக்குமா என்று சிஎன்என் தொலைக்காட்சியின் திரு ஃபரீட் ஸக்காரியா பிரதமர் லீயிடம் கேட்டார். ஒரு கட்சி 50, 60 அல்லது 70 ஆண்டுகளாக 80 விழுக்காடு இடங்களை வெல்லும்போது, அங்கு உண்மையான ஜனநாயகம்  இருக்கமுடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பிரதமர் லீ, மக்கள் அவ்வாறு வாக்களிக்கிறார்கள் என்றால், அதுவே மக்களின் விருப்பம் என்றால், அது ஏன் உண்மையான ஜனநாயகமாக இருக்கக்கூடாது எனக் கேட்டார். அதற்கு திரு ஸக்காரியா, ஆளும் கட்சிக்கு நியாயமற்ற சாதகங்கள் இருப்பதாக வாதங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடப்படுகிறது. கடைசியாக நடந்த 2015 தேர்தலில் இதைக் காணலாம். 2011 தேர்தலில் கிட்டத்தட்ட எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிருந்தது.

“மக்கள் வாக்களித்தனர்,” என்ற பிரதமர், “அவர்களுக்கு என்மீது அதிருப்தி இருந்தால் நான் இங்கு அமைதியாக உட்கார்ந்து, சிரித்துக்கொண்டு உங்களிடம் பேசிக்கொண்டிருக்க மாட்டேன். என் சிந்தனையில் வேறு பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கும்,” என்றார். 

பிரதமர் லீயின் நேர்காணலின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை சிஎன்என்-இல் ஒளிபரப்பானது. அதில், ஆசிய நாடுகளில் அமெரிக்க-சீன வர்த்தக பதற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ஹாங்காங் நிலைமை போன்றவை குறித்துப் பேசினார்.

Loading...
Load next