சுரங்கச் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி

காலாங்-பாய லேபார் விரைவுச் சாலையின் (கேபிஇ) சுரங்கப் பாதையில் வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. 

தெம்பனிஸ் விரைவுச் சாலைக்கு இட்டுச் செல்லும் அப்பர் பாய லேபார் ரோடு வெளிவழி அருகே இச்சம்பவம் நிகழ்ந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் டுவிட்டர் தகவல் வெளியிட்டது.  

தீச்சம்பவம் காரணமாக அந்த வெளிவழி மூடப்பட்டதாக அத்தகவலில் குறிப்பிடப்பட்டது. அதே

நேரத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் இதுகுறித்து தெரிவித்தது. லாரி ஒன்றின் இயந்திரப் பகுதியில் எரிந்த தீயை தனது அதிகாரிகள் அணைத்ததாக அது கூறியது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பிற்பகல் 2.42 மணிக்கு ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தியாளர் சம்பவ இடத்தை அடைந்தபோது எரிந்த நிலையில் லாரி ஒன்று காணப்பட்டது. லாரி அகற்றப்பட்டு சுரங்கப் பாதையின் வெளிவழி மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டதாக மாலை 5.05 மணியளவில் எல்டிஏ தெரிவித்தது. சம்பவத்தை எஸ்சிடிஎஃப் விசாரிக்கிறது.