தீபாவளியை முன்னிட்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்கொடை வழங்க கோரிக்கை

2 mins read
bfad6f2e-8c10-440c-90f1-7d93ad90c7d7
-

இந்தத் தீபாவளி விடுமுறை இந்துக்களுக்குக் கொண்டாட்டமாகவும், மற்றவர்களுக்கு ஓய்வு நாளாகவும் உற்சாகமாக அமையும். ஆனால் சில வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியாவிலுள்ள குடும்பத்தாரைப் பிரிந்து, தீபாவளி சமயத்திலும் இங்கு வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

இவர்களின் நிலையை உணர்ந்த வழக்கறிஞர் தீபா சுவாமிநாதன், தீபாவளி நன்கொடை திரட்டுக்கு ஏற்பாடு செய்கிறார். "இட்ஸ் ரேனிங் ரேன்கோட்ஸ்" என்ற உள்ளூர் தொண்டூழிய அமைப்பின் நிறுவனரான இவர், வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்க இந்நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்கிறார்.

"சென்ற ஆண்டு, நாங்கள் முதல்முறையாக பிட்ஸா விநியோகம் செய்தோம். பணித்தளங்களுக்குச் சென்று உணவைக் கொடுத்த போது ஊழியர்கள் உண்மையாகவே மகிழ்ச்சி அடைந்தனர். எங்களது தொண்டூழியர்களுக்கும் மனதிருப்தி ஏற்பட்டது. எனவே, இவ்வாண்டு மறுபடியும் நடத்த முடிவு செய்தோம்," என்று த பிரைட் தளத்திடம் தீபா கூறினார்.

இந்த அமைப்பு, கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு, பயன்படுத்தப்பட்ட துணிகள், மழைபுகா மேற்சட்டை, முன்கட்டண டேட்டா அட்டைகள் ஆகியவற்றை விநியோகித்து வருகிறது. இவ்வாண்டின் தீபாவளி நன்கொடை நடவடிக்கைக்குப் பொதுமக்கள் சைவ பிட்ஸா, சமோசா, டேட்டா நிரப்புத்தொகை அட்டைகள் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கலாம். அப்பொருட்களை அக்டோபர் 19ஆம் தேதி வெளிநாட்டு ஊழியர்களிடம் கொண்டு கொடுப்பதற்கும் தொண்டூழியர்கள் உதவலாம்.

"பிட்ஸா நன்கொடையாகக் கொடுக்க விரும்புவோர் காலை 11 மணிக்குள் என் வீட்டுக்கு அவற்றை அனுப்பி வைக்கலாம். தொண்டூழியர்கள் உணவையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு, வெளிநாட்டு ஊழியர்களிடம் விநியோகிப்பார்கள்," என தீபா தெரிவித்தார்.

இவ்வாண்டு, சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உணவும் பொருட்களும் வழங்குவது இலக்கு. இந்த நன்கொடை நடவடிக்கையில் பங்கெடுக்க இயலாதவர்கள், தங்களது சொந்த அக்கம்பக்கத்தில் இதுபோல செய்யலாம் என தீபா யோசனை கூறினார். அக்கம்பக்கத்தில் வேலை செய்யும் தோட்டக்காரர்கள் அல்லது கட்டுமான ஊழியர்களுக்குப் பழம் வாங்கிக் கொடுக்கலாம் என்றார் அவர்.

நன்கொடை வழங்க அல்லது தொண்டூழியராக உதவி புரிய "It's Raining Raincoats" இணையத்தளத்தைப் பார்க்கலாம்.