மது அருந்தி கார் ஓட்டிய நடிகைக்கு அபராதம், தடை

மது அருந்தி கார் ஓட்டிய நடிகைக்கு அபராதம், தடை

1 mins read
00969eb8-8a27-49da-9375-94de2c715209
-

மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக நடிகை ரோசலிண்ட் ஃபோ லி ஆன்னுக்கு $1,750 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அனைத்து வகை வாகனங்கள் ஓட்டவும் அவருக்கு 15 மாதத் தடை விதிக்கப்பட்டது

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஹாலந்து நாட்டவரான 36 வயது ரோசலிண்ட் ஃபோ ஒப்புக்கொண்டார். இம்மாதம் 1ஆம் தேதியன்று இரவு 10 மணி அளவில் டெம்சி சாலையில் உள்ள தி வையின் கம்பனி பிஸ்ட்ரோவில் தமது நண்பர்களைச் சந்தித்து அவர்களுடன் மதுபானம் அருந்தினார் ஃபோ.

அதையடுத்து, உலு பாண்டான் சாலையை நோக்கிச் செல்லும் ஹாலந்து சாலையில் அவர் கார் ஓட்டிச் சென்றுகொண்டிருந்தபோது போலிசார் அமைத்திருந்த சோதனைச் சாவடியில் அவரது கார் நிறுத்தப்பட்டது.

ஃபோ மீது மதுபான வாடையை உணர்ந்த அதிகாரிகள் அல்கஹால் அளவு சோதனையை நடத்தினர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஃபோவின் மூச்சுக்காற்றில் கூடுதல் அல்கஹால் இருந்தது.

வாகனம் ஓட்டத் தமக்கு விதிக்கப்பட்ட தடைக்காலத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு நீதி மன்றத்தை ஃபோ கேட்டுக் கொண்டார்.

தமது தாயாருக்குக் கண் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாகவும் அவரை காரில் அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஃபோ கூறினார்.

மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றத்தை முதல்முறை புரிபவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அக்குற்றத்தைத் தொடர்ந்து செய்பவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் $10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.