சிங்கப்பூர் நிரந்தரவாசத்திற்காகக் கையூட்டு: தாயும் மகளும் கைது

சிங்கப்பூர் நிரந்தரவாசியாவதற்கான விண்ணப்பத்தைத் துரிதப்படுத்துவதற்காக மலேசிய பெண்ணிடமிருந்து கையூட்டு பெற்றதற்காக சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனை ஆணைய அதிகாரி ஒருவர் மீதும் அவரது மகள் மீதும் நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனை ஆணையத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரியான 49 வயது திரு லூசி டியோ, அவரது மகள் ‌ஷேரன் லூ வாய் வூன்னுடன் சேர்ந்து மலேசியரான ஃபென்னி டே ஹுயி நீயிடமிருந்து $1,500 கையூட்டு பெற்றுள்ளனர். 

திருவாட்டி டியோவும் 28 வயது லூவும் சிங்கப்பூரர்கள். லூ குடி

நுழைவு அலோசனை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் மலேசியரான ஃபென்னியை அவரது தாயாரிடம் அறிமுகம் செய்துள்ளார். 

ஃபென்னியின் சிங்கப்பூர் நிரந்தரவாச விண்ணப்பத்தைத் துரிதப்படுத்துவதற்காக அந்தக் கையூட்டு கொடுக்கப்பட்டது.

சிங்கப்பூர் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவும்  சிங்கப்பூர் போலிஸ் படையும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பெண்கள் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது தெரிவிக்கப்பட்டது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ்  டியோவுக்கும் லூவுக்கும் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஆளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறையும் $100,000 அபராதமும் விதிக்கப்படலாம். குடிநுழைவுச் சோதனை ஆணையத்தின் மத்திய அடையாளப் பதிவக, தகவல் திட்டத்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்திய 20 குற்றச்சாட்டுகளையும் டியோ எதிர்நோக்குகிறார். 

அந்த இணையத் திட்டத்தினுள் 20 முறை அனுமதியின்றி நுழைந்த டியோ,  11 முறை ஃபென்னியின்  நிரந்தரவாச விண்ணப்பத் தரவுகளைப் பார்வையிட்டுள்ளார். 

மூன்று முறை ஓர் ஆடவரின் கடவுச்சீட்டு விவரங்களைப் பார்வையிட்டுள்ளார்.

மேலும் ஆறு முறை மற்றொரு பெண்ணின் நிரந்தரவாச விண்ணப்பங்களைப் பார்வையிட்டுள்ளார். முறைகேடான கணினி பயனீட்டுச் சட்டத்தின்கீழ் இந்தக் குற்றங்களுக்கு $5,000 வரை அபராதமும் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறையும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த குடிநுழைவுச் சோதனை ஆணையம் தவறிழைக்கும் அதிகாரிகள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்கள் விசாரணைகள் மூலம் இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது என்றும் தெரிவித்தது.

24 வயது ஃபென்னி லஞ்சம் கொடுத்த இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறையும் $100,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.