தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் (எல்டிடிஇ) தொடர்புகொண்ட சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலாக்கா ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ஜி.சாமிநாதனும் நெகிரி செம்பிலான் மாநிலம் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி குணசேகரனும் கைது செய்யப்பட்டோரில் முக்கியமானவர்கள். இவர்கள் தவிர, கெடா, கோலாலம்பூர், பேராக் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் சிலாங்கூரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கைது நடவடிக்கை நீடித்தது. கைதான இரு சட்டமன்ற உறுப்பினர்களும் ஜனநாயகச் செயல் கட்சியைச் சேர்நதவர்கள். இவர்கள் கைது செய்யப்பட்டதை புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் அயூப்கான் மைதீன் பிச்சை உறுதி செய்தார். கடந்த நவம்பர் முதல் இவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வந்ததாக அவர் கூறினார்.
"வெளிநாடுகளில் இருக்கும் சில சக்திகள் எல்டிடிஇ இயக்கத்தை இங்கு மீண்டும் செயல்பட வைக்க முயன்று வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்திற்குப் புறம்பாக எவர் நடந்தாலும், குறிப்பாக பயங்கரவாதத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எல்டிடிஇ இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்துள்ளன," என்று புக்கிட் அமானில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் திரு அயூப் கூறினார்.
எல்டிடிஇ இயக்கத்தோடு தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இதுவரை மலேசியாவைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த கைது நடவடிக்கை தமக்கு அதிர்ச்சி அளித்திருப்பதாக ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சான்டியாகோ தெரிவித்துள்ளார்.
"இந்த கைது நடவடிக்கை பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இலங்கையிலும் அனைத்துலக அளவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படவில்லை. 2009ஆம் ஆண்டு உள்நாட்டுப்
போரில் அந்த இயக்கத் தலைவர்கள் கொல்லப்பட்ட பின் அதன் அனைத்துலகக் கட்டமைப்பு கலைந்துவிட்டது.
"மலேசியாவிலும் அந்தக் கட்டமைப்பு இல்லை. அந்த இயக்கத்திற்காக நிதி திரட்டும் முயற்சிகளும் இங்கு நடக்கவில்லை. எனவே கைது நடவடிக்கையின் பின்னணி என்ன என்று உறுதியாகத் தெரியவில்லை," என்றார் திரு சார்ல்ஸ்.

