சீன அதிபரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள்

சீன அதிபரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள்

2 mins read
6abe372d-fa0a-4470-a15c-c6a4614d6a9f
சீன அதிபரை வரவேற்கும் சீன எழுத்துகளின் வடிவில் பள்ளி மாணவர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். படம்: ஏஎஃப்பி -

தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் இந்தியா-சீனா உச்சநிலை சந்திப்பில் பங்கேற்க சீன அதிபர் ஸி ஜின்பிங் இன்று சென்னை வந்திறங்குகிறார். இன்றும் நாளையும் இந்திய பிரதமர் மோடியும் ஸியும் பங்கேற்கின்றனர். இரு நாட்டுத் தலைவர்களின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்குள்ள கலைச்சின்னங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு பொலிவூட்டப்பட்டு உள்ளன.

தனி விமானத்தில் இந்திய நேரம் பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை வரும் சீன அதிபரை வரவேற்கும் விதமாக விமான நிலையம் முதல் அவர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல் வரை தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். வரவேற்புக்காக மாமல்லபுரத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 250 முதல் 1,000 மாணவர்கள் வரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாலை 4 மணியளவில் மாமல்லபுரத்துக்குப் புறப்படும் அவருக்கு கிண்டி முதல் மாமல்லபுரம் வரை 34 இடங்களில் கலைநிகழ்வுகளுடனான வரவேற்புகள் கொடுக்கப்படும். சென்னை முதல் மாமல்ல

புரம் வரை 10,000 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். சீன அதிபருடன் 200 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் தமிழகம் வருகிறது. மாமல்லபுரம் பகுதி முழுவதும் 500 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. சாலை ஓரக் கடைகள் தற்காலிகமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரை 22 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். மாமல்லபுரத்தை ஒட்டிய கடற்பரப்பில் 2 போர்க்கப்பல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இன்று மாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு சுற்றுலாத்தலத்தில் அதிபர் ஸியை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் இருவரும் ஐந்து ரதம், கடற்கரை கோவில் ஆகியவற்றை பார்வையிடுவர். நாளை காலை மோடி தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் கோவளம் ஹோட்டலில் இரு தலைவர்களும் எல்லை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்து ஆலோசிப்பர்.