சுடச் சுடச் செய்திகள்

நகர மன்ற இழப்புகளுக்குப் பாட்டாளி கட்சி எம்பிக்கள் பொறுப்பு

பாட்டாளிக்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கும் அதே கட்சியைச் சேர்ந்த அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில்வியா லிம்மும் லோ தியா கியாங்கும் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்குப் பொறுப்பு என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த மூவரின் நிர்வாகத்தில் நகர மன்றம் பல மில்லியன் வெள்ளி மதிப்பிலான முறையற்ற கட்டணங்களைச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. பொறுப்பாளர்கள் என்ற முறையில் திருவாட்டி லிம்மும் திரு லோ தியா கியாங்கும் தங்களது கடமையை மீறிவிட்டதாக நீதிபதி கண்ணன் ரமேஷ்  கண்ணன் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.  நகர மன்றத்தை நிர்வகிக்க எஃப்எம்எஸ்எஸ் நிறுவனத்தைப் பணியில் அமர்த்தியதன் மூலம் திரு சிங், தமது கடமைக்குப் புறம்பாக நடந்துகொண்டதாகவும் அந்தத் தீர்ப்பில் எழுதப்பட்டுள்ளது.

இந்தக் கடமை மீறல்களால் நகர மன்றம் குறைந்தது  33.7 மில்லியன் வெள்ளி பணத்தை 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை எஃப்எம்எஸ்எஸ் நிறுவனத்திற்குக் கொடுக்க நேரிட்டது. இந்தக் காலக்கட்டத்தில் திருவாட்டி லிம், நகர மன்றத்தின் தலைவராகவும் திரு லாவ் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றினர். திரு சிங், நகர மன்றத்தின் குத்தகை மற்றும் ஒப்பந்தங்களுக்கான பரிந்துரையாளராகச் செயல்பட்டார்.

இது உரிமையியல் வழக்கு என்பதால் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடிப்பதன் தொடர்பில் பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

மூவரும் நொடித்துபோனவர்களாக ஆகலாம்

தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்யலாம். 

இழப்புகளை ஆராய்ந்து அளவிடுவதற்கும் எம்பிக்களிடமிருந்து எவ்வளவு இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியும் என்பதை உறுதி செய்வதற்கும் மற்றொரு சுற்று நீதிமன்ற விசாரணை நடத்தப்படும். 

தவறாகக் கட்டணம் செலுத்தப்பட்ட அனைத்துத் தொகைகளுக்கும் அதற்கு ஈடான இழப்பீட்டுத் தொகையை நகர மன்றம் கேட்டுள்ளது.

இழப்பீட்டுத் தொகையை  இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டமுடியாமல் போனால் அவர்கள் நொடித்துப்போனவர்களாக அறிவிக்கப்பட்டு தங்களது நாடாளுமன்ற இடங்களை இழந்துவிடுவார்கள்.