சுடச் சுடச் செய்திகள்

கோலாலம்பூரிலுள்ள குடியிருப்பில் திடீர் நிலச்சரிவு

கோலாலம்பூரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 65 குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஜாலான் ஸ்ரீ பெஞ்சாலாவிலுள்ள அஸாலியா அடுக்குமாடி வீடுகளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 

நேற்று பின்னிரவு நேரத்தில் உதவிக்கான அழைப்பு உள்ளூர் தீயணைப்புப் படையினருக்குக்  கிடைத்ததாக த ஸ்டார் பத்திரிகை தெரிவித்தது. அழைப்பு கிடைத்தவுடன், 19 தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறப்படுகிறது.

கட்டடத்திற்குப் பின்னால் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கட்டடம் பாதுகாப்பற்றதாக இருப்பதால் இருபத்து நான்கு வீடுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் தற்காலிகமாகச் சமூக நிலையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.