‘இழப்புத் தொகையை நகர மன்றம் தெரிவிக்கவேண்டும்’

பாட்டாளிக்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கும் அதே கட்சியைச் சேர்ந்த அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில்வியா லிம்மும் லோ தியா கியாங்கும் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்குப் பொறுப்பு என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த மூவரின் நிர்வாகத்தில் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் (ஏஎச்டிசி) $33.7 மில்லியன் அளவிலான முறையற்ற கட்டணங்களைச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

பாட்டாளிக் கட்சியின்  இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எட்டு பிரதிவாதிகளிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதன் தொடர்பில், இந்த வழக்கின் அடுத்த கட்டத்தில், மன்றத்துக்கு ஏற்பட்ட ‘உண்மையான அல்லது சரியான இழப்பு’ எவ்வளவு என்பதை அந்த நகர மன்றம்தான் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் நிர்வாக முகவையான எஃப்எம் சொல்யூஷன்ஸ் அண்ட் சர்வீசஸ், அதனுடன் தொடர்புடைய மற்றொரு நிறுவனம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட இரண்டு பெரும் ஒப்பந்தங்களின்கீழ் செலுத்தப்பட்ட அனைத்து கட்டணங்களிலும் நகர மன்றத்தின் நிதி முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக நீதிபதி கண்ணன் ரமேஷ் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டபோது தெரிவித்தார்.

அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்துக்கு வழங்கப்பட்ட சேவைகளுக்கான மதிப்பு, அந்தச் சேவைகளுக்காக செலுத்தப்பட்ட தொகை ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை நகர மன்றம் திரும்பப் பெற்றுக்கொள்ள இயலும் என்று நீதிபதி கூறினார்.

நகர மன்றம் பெற்ற அந்தச் சேவைகளுக்கு செலுத்திய முழுத் தொகையும் இழப்பாகக் கருதப்படாது என்றும் அவர் கூறினார்.

நகர மன்றத்தை நிர்வகிக்க 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை எஃப்எம்எஸ்எஸ் நிறுவனத்தைப் பணியில் அமர்த்தியதன் மூலம் திரு சிங், தமது கடமைக்குப் புறம்பாக நடந்துகொண்டதாகவும் அந்தத் தீர்ப்பில் எழுதப்பட்டுள்ளது.

இந்தக் காலத்தில் திருவாட்டி லிம், நகர மன்றத்தின் தலைவராகவும் திரு லோ பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றினர். திரு சிங், நகர மன்றத்தின் குத்தகை மற்றும் ஒப்பந்தங்களுக்கான பரிந்துரையாளராகச் செயல்பட்டார்.

பொங்கோல் ஈஸ்ட் தனித் தொகுதியில் பாட்டாளிக் கட்சி 2013ஆம் ஆண்டு இடைத் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தபோது இதே எட்டு பிரதிவாதிகளின் மீது பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் வழக்குத் தொடுத்திருந்தது.

அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் நிதி யாருக்கு, எங்கே செலுத்தப்பட்டது என்பது பற்றிய குழப்பம் ஏதும் இல்லாததால் பொதுக் கணக்குக்கு தன்னிச்சையாக உத்தரவிடப்போவதில்லை என்றும் நீதிபதி கூறினார்.

பொறுப்பாளர்கள் என்ற முறையில் பிரதிவாதிகள் கடமை தவறியதன் தொடர்பில்  அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம், பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் ஆகியவை கோரிய பிற தீர்வுகளுக்கும் வழிகாட்டிக் குறிப்புகளை நீதிபதி ரமேஷ் வகுத்தார். 

அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்ற ஒப்பந்தங்களின் வாயிலாகச் சம்பாதித்த லாபத் தொகைஅல்லது நகர மன்றத்துக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஆகிய இரண்டில் ஒன்றை எஃப்எம்எஸ்எஸ் நிறுவனம், அதன் கூட்டு உரிமையாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நேற்–றைய தீர்ப்–பின் மூலம் நகர மன்–றத்–துக்கு ஏற்–பட்ட இழப்–பீட்–டுக்–குக் கார–ண–மா–ன–வர்–க–ளைக் கண்டு–பி–டிக்–கும் இந்த வழக்–கின் முதல் பகுதி முடி–வுக்கு வந்–தது. இழப்–புக–ளைக் கண்–ட–றி–வது, வழக்–கின் அடுத்த நிலை–யாக இருக்–கும்.