சுடச் சுடச் செய்திகள்

இரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்

மாமல்லபுரத்தின் சிற்பக்கலைச் சிறப்புகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சொல்லச் சொல்ல, அதை மாண்டரின் மொழியில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கு மொழிபெயர்த்துச் சொன்னவர் மதுசூதன் ரவீந்திரன் என்ற இந்தத் தமிழரே.

தமிழகத்தில் பிறந்த இவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். பின் இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், இந்திய வெளியுறவுச் சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட ஈராண்டு காலம் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மூன்றாம் நிலை, பின் இரண்டாம் நிலைச் செயலராகப் பணியாற்றிய திரு மதுசூதன், பின்னர் 2011 ஆகஸ்ட்டில் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றினார்.

அப்போது, கலிஃபோர்னியாவிலுள்ள மாண்ட்ரி அனைத்துலகக் கல்விக் கழகத்தில் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

பின்னர் 2013 ஜூலையில் மீண்டும் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட இவர், இரண்டாம் நிலைச் செயலராகவும் பின் முதல் நிலைச் செயலராகவும்  ஐந்தாண்டு காலம் பணிபுரிந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்திய வெளியுறவு அமைச்சு அலுவலகத்தில் துணைச் செயலராக இருந்து வருகிறார்.

தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி, சீனம் என ஐந்து மொழிகளில் புலமைமிக்க இவர், கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஜின்பிங்-மோடி சந்திப்பின்போதும் மொழிபெயர்ப்பாளராகச் செயல் பட்டது நினைவுகூரத்தக்கது.