சிங்கப்பூர் பொருளியல் மந்தநிலையிலிருந்து தப்பித்ததாக வர்த்தக, தொழில் அமைச்சு இன்று வெளியிட்ட புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
2019ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் ஆண்டு அடிப்படையில் 0.1 விழுக்காடு வளர்ந்ததாக அமைச்சின் முன்னோட்டக் கணிப்புகள் காட்டுகின்றன.
காலாண்டு அடிப்படையில் பொருளியல் 0.6 விழுக்காடு விரிவடைந்தது. இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டின் 2.7 விழுக்காடு சரிவுடன் ஒப்புநோக்குகையில் தற்போதைய நிலை முன்னேற்றமாக உள்ளது.
காலாண்டு அடிப்படையில் பொருளியல் மந்தநிலை இரண்டு காலாண்டுகளுக்குத் தொடர்ந்தால் அது பொருளியல் மந்தநிலையாகக் கருதப்படுகிறது
இருந்தபோதும் புளூம்பர்க் ஆய்வாளர்களை இந்தப் புள்ளிவிவரங்கள் வருத்தமடையச் செய்துள்ளன. ஆண்டு அடிப்படையில் 0.2 விழுக்காடு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அவர்கள் எதிர்பார்த்திருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
பொருளியல் மந்தநிலையிலிருந்து தப்பித்ததால் சிலருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் பொருளியல் வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பில் இன்னும் மட்டுப்பாடுகள் நிலவுவதாகப் பொருளியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உற்பத்தித் துறையில் தொடர்ந்து மந்தநிலை தெரிவதை வர்த்தக, தொழில் அமைச்சின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டுக்கான வளர்ச்சி விகிதம், கடந்தாண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் -3.5 % ஆக உள்ளது. இந்த விழுக்காடு, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் -3.3 % ஆகவும் முதலாம் காலாண்டில் -0.4% ஆகவும் இருந்தது.
மின்னணுவியல், துல்லிய பொறியியல், போக்குவரத்து பொறியியல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, வளர்ச்சி விகித சரிவுக்குக் காரணம் என்று வர்த்தக, தொழில் அமைச்சு குறிப்பிட்டது. இந்தப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள மந்தம், ரசாயனம், உயிரியல் மருத்துவ உற்பத்தி மற்றும் பொதுவான உற்பத்திப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள ஏற்றங்களை மட்டுப்படுத்தியுள்ளதாக அமைச்சு கூறியது.
கட்டுமானத்துறை ஆண்டு அடிப்படையில் மூன்றாவது காலாண்டில் 2.7 விழுக்காடு வளர்ந்துள்ளது. முன்னைய காலாண்டில் இருந்த 2.8 விழுக்காடு வளர்ச்சியை இது நீட்டித்துள்ளது. பொது மற்றும் தனியார் கட்டுமான நடவடிக்கைகளின் அதிகரிப்பு இந்த வளர்ச்சிக்குக் கைகொடுத்ததாக அமைச்சு கூறியது.
காலாண்டு அடிப்படையில் கட்டுமானத் துறையின் வளர்ச்சி 1.1 விழுக்காடு குறைந்துள்ளது. ஆயினும், இரண்டாவது காலாண்டில் ஏற்பட்ட 5.3 விழுக்காடு குறைவைக் காட்டிலும் இது முன்னேற்றமாக உள்ளது.
இந்தக் காலாண்டுக்கான வளர்ச்சிக்கு நிதி மற்றும் காப்புறுதித் துறையும் வர்த்தகச் சேவைத் துறையும் முக்கிய பங்களித்ததாக அமைச்சு தெரிவித்தது. ஆயினும், மொத்த விநியோக விற்பனை போன்ற வர்த்தகம் சார்ந்த சேவைகள், நலிவடைந்த வெளிநாட்டுத் தேவையாலும் மின்னணுவியல், துல்லிய பொறியியல் துறைகளில் ஏற்பட்ட மந்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளன.

