பிரதமர் லீ: மாற்றத்தைச் சமாளிக்க தொழிலாளர்களுக்கு உதவி

நிச்சயமற்ற எதிர்காலத்திற்கு சிங்கப்பூர் தயாராகும்போது, தொழிலாளர்கள் தங்களது தொழில்துறைகளில் நேரும் மாற்றங்களைச் சமாளிக்கவும் வேலையில் நீடித்திருக்கவும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 

இதுபோன்ற பலவீனமான நிலையிலுள்ள தொழிலாளர்களுக்கு அரசாங்கம் துணைநின்று, அவர்களின் நலனை உறுதிப்படுத்தும் என செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற என்டியுசி தேசிய பேராளர்கள் மாநாட்டில் பிரதமர் லீ சியன் லூங் உறுதியளித்தார். 

உலகின் மற்ற பல பகுதிகளில், வேலைகளைப் பறிகொடுத்த தொழிலாளர்கள் சொந்தமாகத் தாக்குப்பிடிக்க விடப்பட்டதாலும், வேலையில் இருந்தவர்கள் பின்தங்கியிருப்பதாக நினைத்ததாலும் அதிருப்தி ஆழமாக வேரூன்றி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இதனால் பல இடங்களில் சமுதாயம் பிளவுபட்டு ஆர்ப்பாட்டங்களும் நடக்கின்றன. 
“இந்நிலைமை நமக்கும் நேர்ந்தால், அவர்களைப் போலவே நாமும் அதே விளைவுகளால், அதைவிட மோசமாக, பாதிப்படைவோம். ஏனெனில், நாம் அவ்வளவு பலவீனமான நிலையில் இருக்கிறோம்,” என்றார் பிரதமர் லீ.
 
“சிங்கப்பூரை ஆள்வது, சிரமமான தீர்மானங்கள் எடுத்து அவற்றை நிறைவேற்றுவது, அல்லது நாட்டின் நீண்டகால நலனுக்காகத் திட்டமிடுவது சாத்தியமற்றதாகிவிடும்,” என்றார் அவர். 

இத்தகைய சூழ்நிலைகள் சிங்கப்பூர் மீதான நம்பிக்கையை முற்றாக அழித்துவிடும். “சிங்கப்பூரின் கதை முடிந்துவிடும்,” என்று பிரதமர் கூறினார்.
 
ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸுக்கும் இடையிலான இணைத்திற உறவுமுறை, இத்தகைய சூழ்நிலையை சிங்கப்பூர் தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்று பிரதமர் லீ குறிப்பிட்டார். 

தொழிலாளர் இயக்கத்தின் ஆணிவேர்களுடன் நீடிக்கும் நெருக்கமான உறவைக் கட்சி நிலைநாட்டும் என அவர் வலியுறுத்தினார். 

சிங்கப்பூரிலுள்ள தொழிலாளர்களின் நலனையும் எதிர்காலத்தையும் முன்னேற்றுவதே மக்கள் செயல் கட்சியின் அடிப்படை இலக்கு என்று குறிப்பிட்ட பிரதமர் லீ, வளப்பத்தையும் வளர்ச்சியையும் உருவாக்க துணைபுரியும் சமமான, ஆக்ககரமான பங்காளியாகத் தொழிற்சங்க இயக்கம் இருந்து வருவதாகவும் கூறினார்.