தென் சீனக்கடலில் பூசல் ஏற்படும் சாத்தியத்திற்குத் தயாராக மலேசியா தனது கடற்படையை மேம்படுத்துவது அவசியம் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சயிஃபுதின் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.
சர்ச்சைக்குரிய கடற்பகுதி குறித்து மலேசியா ராணுவம் சாரா அணுகுமுறையைப் பின்பற்றி வந்தபோதும் போர்க்காலத்தில் வல்லரசு நாடுகளின் கடற்படையை எதிர்கொள்ள மலேசியக் கடற்படைக்கு ஆற்றல் மேலும் தேவைப்படும் என்பதை திரு சயிஃபுதின் தெரிவித்திருக்கிறார்.
சீனாவின் கடற்படை என்ன, கடலோரக் காவல் படைக் கூட மலேசிய கடற்படையைத் திணரவைக்கும் ஆற்றல் பெற்றது என்று திரு சைஃபுதின் தெரிவித்தார். அத்துடன், மலேசிய கடற்படையின்
கப்பல்கள், சீனாவின் கடலோரக்காவல் படையின் கப்பல்களைக் காட்டிலும் சிறியவை என்றும் அவர் நாடாளுமன்றக் கூட்டத்தின் கேள்வி பதில் அங்கத்தின்போது கூறினார்.
"மோதல் ஏற்பட நாங்கள் எவரும் விரும்பவில்லை. ஆயினும் எங்களது (ராணுவ) உடைமைகளுக்குப் புதுப்பிப்பு தேவை. அப்போதுதான் தென் சீனக் கடலில் இரு வல்லரசுகளுக்கு இடையே மோதல் மூண்டால் அதனை நாங்கள் இன்னும் நன்கு சமாளிக்க முடியும்," என்று அவர் தெரிவித்தார்.
தென்சீனக்கடலின் பெரும்பகுதியை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. அந்தக் கடலின் வாயிலாக 3.4 டிரில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
மலேசியா, வியட்னாம், ஃபிலிப்பீன்ஸ், புருணை, தைவான் ஆகிய நாடுகள் இதே கடற்பகுதிகளில் தத்தம் உரிமைகளை நிலைநாட்ட முயல்கின்றன.
சீனா உரிமை கொண்டாடும் சில தீவுகளுக்கு அருகே அமெரிக்கா தனது போர்க் கப்பல்களையும் ராணுவ விமானங்களையும் அனுப்பி பதற்றநிலையை அதிகரிப்பதாக பெய்ஜிங் குற்றம் சாட்டுகிறது.
சீனாவின் நிலைப்பாட்டை மலேசியா குறைகூறியிருந்தாலும் அது அண்மைக் காலமாக அமைதி காத்து வந்தது. சீனக் கப்பல்கள் அனுமதியின்றி தனது கடற்பகுதிக்குள் நுழைந்தபோதும் அந்நாட்டை எதிர்த்து நிற்கும் சக்தி மலேசியாவுக்கு இல்லை என்று டாக்டர் மகாதீர் முகம்மது ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்.

