பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்த குற்றத்திற்காக தகவல் தொழில்நுட்ப துறை பொறியாளர் ஒருவருக்கு 30 மாத சிறைத் தண்டனை இன்று விதிக்கப்பட்டது. அகமது ஹுசேன் காதிர் உதுமான் எனப் பெயர் கொண்ட அந்த ஆடவர், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்கியதற்காக தண்டனை பெற்ற முதல் சிங்கப்பூரர் ஆவார்.
மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் இன்று பயங்கரவாதத்துக்கு உதவி புரிவதற்காக அவர் இரண்டு தவணைகளாக மொத்தம் $1,145 வெளிநாட்டில் இருந்த ஒருவரிடம் கொடுத்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். ஜமைக்கா நாட்டில் வாழும் ஷேக் அப்துல்லா அல்-ஃபைசால் என்ற தீவிரவாத போதகர் ஒருவரின் இணையத்தளம், யூடியூப் ஒளிவழி பற்றி அறிந்தபின் 2013ஆம் ஆண்டில் தான் தீவிரவாத சிந்தனைக்கு ஆளானதை அகமது ஒப்புக்கொண்டார். அந்த தீவிரவாத போதகர் ஜிகாத் எனப்படும் புனிதப்போரில் ஈடுபடுவதை ஆதரிப்பவர் என்பதை அறிந்திருந்தார் என்றும் அதில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் முஸ்லிம் அல்லாதாருக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதும் உள்ளடங்கியது என்பதை அறிந்திருந்தார் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சோங் யோங்ஹி கூறினார். அத்துடன், இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவது முஸ்லிம்களின் கடமை என்றும் ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் பயங்கரவாத அமைப்பை அந்த போதகர் பாராட்டினார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த போதகரின் இந்த சிந்தனையை அகமது ஏற்றுக்கொண்டார் என்றும் அதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பு கொண்டார் என்றும் நீதிமன்றம் கேட்டறிந்தது.
இதன்பிறகு இருவரும் ஃபேஸ்புக், மின்னஞ்சல், வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் தொடர்பு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஷேக்குக்கு தான் நிதியுதவி அளிக்க முடிவு செய்த அகமது, ஜூலை 2016ஆம் ஆண்டு அவருக்கு, ஷேக் சார்பாக நிதி திரட்டுவதில் ஈடுபட்டு வந்த பேட்ரிக் கிரே என்பவருக்கு, $1,059 அகமது பணப் பரிமாற்றம் செய்தார்.
பின்னர், இரண்டாவது தவணையாக அதே ஆண்டு ெசப்டம்பர் 3ஆம் தேதி ஷேக்கின் மனைவிக்கு $62 பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது. அகமது 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம், தீவிரவாத சிந்தனையை தழுவியதாலும் ஐஎஸ்ஐஎஸுக்கு ஆதரவாக ஆயுதம் தாங்கி வன்முறைப் போராட்டத்தில் இறங்க விருப்பம் கொண்டதாலும், சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்பு இலாகாவால் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்கியதற்காக அகமதுக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டயும் $50,000 வரையிலான அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

