நான்கு 5ஜி கட்டமைப்புகளை ஏற்படுத்த சிங்கப்பூர் திட்டம்

பொருளியல் வளர்ச்சிக்கு முக்கியமாகக் கருதப்படும் மேம்பாட்டு நடவடிக்கைகளை சிங்கப்பூர் எடுத்துவரும் வேளையில், நான்கு 5ஜி கட்டமைப்புகள் வரை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. தொடக்கத்தில் இரண்டு 5ஜி கட்டமைப்புகளை மட்டுமே ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

அடுத்த ஆண்டிற்குள் அந்த நான்கு 5ஜி கட்டமைப்புகளும் அறிமுகம் காணும் எனத் தெரிகிறது. இருந்தாலும், நாடு முழுவதும் 5ஜி சேவையைச் செயல்படுத்த அதிக காலம் எடுக்கலாம். அதே நேரத்தில், தீவு முழுமைக்கும் சென்றடையக்கூடிய 5ஜி காற்றலைகள் தட்டுப்பாட்டால் இரண்டு கட்டமைப்புகள் மட்டுமே அந்தச் சேவையை வழங்கக்கூடும்.

அறிவார்ந்த துறைமுகங்களிலும் தொழிலகங்களிலும் தொலைவில் இருந்தவாறே பாரந்தூக்கிகளை, சரக்குக் கொள்கலன்களை அல்லது பெட்டிகளை வாகனங்களில் எடுத்துச் செல்வது உள்ளிட்ட உடனடித் தொழிலகத் தேவைகளுக்காக சிறிய அளவிலான மேலும் இரு 5ஜி கட்டமைப்புகளை ஏற்படுத்த தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்களுடன் கலந்தாலோசித்த பிறகே ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. கடந்த ஜூலையுடன் நிறைவடைந்த அந்த இரு மாத கால ஆலோசனை நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, நாடு முழுவதும் சென்றடையும் வகையிலான இரண்டு 5ஜி கட்டமைப்புகளை மட்டுமே ஏற்படுத்த தொடக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேசிய அளவிலான இரு கட்டமைப்புகளுடன் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் செயல்படுத்தும் வகையில் மேலும் இரு 5ஜி கட்டமைப்புகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று அறிவித்தார். அதில் சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1, டிபிஜி டெலிகாம் ஆகிய நான்கு சிங்கப்பூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பங்கேற்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

“பயனீட்டாளர்களும் தொழில்செய்வோரும் அதிக பலன்பெறும் வகையில் சிறந்த போட்டித்தன்மையையும் சிறந்த தெரிவுகள், கட்டுப்படியாகக்கூடிய விலைகள், சேவையில் புத்தாக்கம் ஆகியவற்றையும் ஆணையம் எதிர்பார்க்கிறது. சிங்கப்பூரின் 5ஜி கட்டமைப்பு நமது மின்னிலக்கப் பொருளியலின் முதுகெலும்பாக விளங்கும்,’ என்று அமைச்சர் தெரிவித்தார்.

சன்டெக் மாநாட்டு மையத்தில் நேற்று நடந்த இரண்டாவது சிங்கப்பூர் மின்னிலக்கத் தொழிலக நாள் நிகழ்ச்சியின்போது திரு ஈஸ்வரன் இவ்வாறு பேசினார்.

இப்போதைய 4ஜி கட்டமைப்பைக் காட்டிலும் 20 மடங்கு இணைய வேகத்தையும் ஆயிரம் மடங்கிற்கு மேலான சாதனங்களை இணைக்கும் திறனையும் 5ஜி கட்டமைப்பு கொண்டிருக்கும்.

ஆர்வமுடைய நிறுவனங்கள் தங்களது செயல்பாட்டுத் திட்டங்கள் தொடர்பிலான விரிவான பரிந்துரைகளுடன் கூடிய விண்ணப்பங்களை 2020 ஜனவரிக்குள் சமர்ப்பிக்கும்படி ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

வழக்கமான அலைக்கற்றை ஏலக்குத்தகை போல இல்லாமல், ஒரு கட்டுப்பாட்டுச் செயல்முறை மூலம் 5ஜி சேவையை வழங்கும் நிறுவனங்கள் தேர்வுசெய்யப்படும்.

தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிதியாற்றல், கட்டமைப்புப் பாதுகாப்பு வடிவமைப்பு, 2022 இறுதிக்குள் தீவு முழுவதும் 50 விழுக்காட்டு அளவிற்கு செயல்பாட்டு எல்லையை எட்டும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

தேசிய அளவில் 5ஜி சேவையை வழங்க விரும்பும் நிறுவனங்கள் 3.5 கிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்காக குறைந்தது $55 மில்லியன் செலுத்த வேண்டி இருக்கும். அத்துடன், பயன்பாட்டுக் கட்டணமாக ஆண்டுக்கு $154,000 தொகையைப் பதினைந்து ஆண்டுகளுக்கு அந்நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

அந்த நிறுவனங்களுக்கு 26 கிகாஹெர்ட்ஸ், 28 கிகாஹெர்ட்ஸ் ஆகிய இரு ‘மில்லிமீட்டர் அலைக்கற்றை’களும் உரிமக் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும். இருப்பினும், வருடாந்திர பயன்பாட்டுக் கட்டணமாக $1.232 மில்லியனை அந்நிறுவனங்கள் 16 ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டும்.

இதனிடையே, சிறிய அளவிலான மற்ற இரு 5ஜி கட்டமைப்புகளைச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு ‘மில்லிமீட்டர் அலைக்கற்றை’ மட்டுமே வழங்கப்படும். அந்நிறுவனங்களும் 16 ஆண்டுகளுக்கு வருடாந்திர பயன்பாட்டுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

மேம்பட்ட 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள நாடு பொருளியலிலும் நல்ல வளர்ச்சியை எட்டும் எனக் கருதப்பட்டு வரும் நிலையில், அதை மையமாக வைத்தே அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போரும் இருந்து வருகிறது.

தனது நட்பு நாடுகள் ‘ஹுவாவெய்’ நிறுவனத்தின் 5ஜி தயாரிப்புகளைப் பயன்படுத்தாமல் தடுக்க அமெரிக்கா முயன்று வருகிறது. ‘ஹுவாவெய்’ திறன்பேசிகள் மூலம் சீனா உளவு பார்க்கலாம் என அமெரிக்கா அஞ்சுவதே அதற்குக் காரணம்.

இந்நிலையில், “5ஜி கட்டமைப்புகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்பது எங்களின் நிலைப்பாடும்கூட. அதனால் 5ஜி சேவை வழங்கும் நிறுவனங்களைத் தேர்வு செய்வதில் பாதுகாப்பு முக்கிய அம்சமாகக் கவனத்தில் கொள்ளப்படும்,” என்று அமைச்சர் ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!