பூமலையைச் சுற்றிப்பார்க்கச் செல்வோர் இனிமேல் 350 மீட்டர் நீளத்திலான வானுயர் தொடர்பாதையைப் பயன்படுத்த முடியும். அந்தப் பாதை வழியாகச் செல்பவர்கள் கடல் மட்டத்தில் இருந்து 40 மீட்டர் உயரத்தில் உள்ள புதிய பூங்காவைக் கடந்து போக லாம். 'மிங்க்ஸின் ஃபவுண்டேஷன் ரேம்ப்ளர்'ஸ் ரிட்ஜ்' என்னும் அந்த உயர்பாதை நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இதில் நடந்து செல்லும்போது தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல மலைகளில் காணப்படும் தாவரங்களையும் அவர்கள் பூமலை வருகையாளர்கள் காணமுடியும். யுனெஸ்கோவின் உலக மரபுடைமைத் தளம் என்ற பெருமையைப் பெற்ற பூமலையின் மேற்குப்புற எல்லைக்குப் பின்னால் அமைக்கப்படும் கேலப் விரிவாக்கத்தின் ஒரு பகுதிதான் இந்த உயர்பாதை. கேலப் ரோட்டில் இந்த விரிவாக்கம் அமைகிறது. அடுத்த ஆண்ட கற்றல் வனம் ஒன்று இங்கு உருவாக்கப்படும். அதில் இருந்து டையெர்சால் அவென்யூ வழியாக விரிவடையும் 200 மீட்டர் பாலத்தைக் கடந்து சென்று கேலப் விரிவாக்கத்திற்குச் செல்லலாம். உயர்பாதை திறப்பு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் இந்தப் புதிய அம்சங்களுக்கான திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்டதாகச் சொன்னார்.
நிகழ்ச்சிக்கு வருகையளித்தவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், "உங்களில் சில பேருக்குத் தெரியும். 160 ஆண்டுகளுக்கு முன்னர் பூமலை உருவானபோது அதன் பரப்பளவு 22 ஹெக்டர்தான். ஆனால், தற்போதைய புதிய கேலப் விரிவாக்கத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட நான்கு மடங்கு பெரிதாக 82 ஹெக்டர் நிலப்பரப்பு கொண்டதாக மாறும்," என்றார்.
பூமலையின் பர்கில் ஹால் பகுதிதான் 35 மீட்டர் உயரத்துடன் ஆக உயரமான தளமாக இருந்தது. ஆச்சரியங்களைக் கண்டு ரசிக்கும் மனநிலையில் உள்ளவர்கள் புதிய உயர்பாதை அனுபவத்தைப் பெறுமாறு வருகையாளர்களை அமைச்சர் ஊக்குவித்தார். கேலப் விரிவாக்கத்தில் அடுத்த ஆண்டு இரு பழமைப் பாதுகாப்பு இல்லங்கள் திறக்கப்படும் என்று திரு வோங் அறிவித்தார்.
"ஃபாரஸ்ட் டிஸ்கவரி சென்டர் அவற்றுள் ஒன்று. இங்கு இடம்பெறும் கண்காட்சிகள், பட்டறைகள், வனச்சூழல் இயல் தொடர்பான நடவடிக்கைகள் போன்றவற்றின் மூலம் வன தாவரங்கள் பற்றி வருகையாளர்கள் அதிகம் அறிந்து கொள்ள முடியும். தாவரவியல் கலைக்கூடம் என்பது மற்றோர் இல்லம். கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பாதுகாப்பட்டு வரும் ஆவணங்கள் வழியாக அரிய புத்தகங்களையும் கலைப் படைப்புகளையும் வருகையாளர்கள் பயன்படுத்த முடியும்," என்றார் அமைச்சர்.
சிங்கப்பூர் பூமலை அமைப்பின் தோட்டக்கலை மற்றும் நிர்வாகப் பிரிவு இயக்குநர் ஷீ ஸி குயங்க் விளக்குகையில், "உயர்பாதையில் தொடர்ந்து வீசும் தென்றலையும் இதமான காற்றையும் அனுபவிக்கலாம். அந்தப் பாதை நெடுக 150 வகையான தாவரங்களும் செடிகளும் உள்ளன. இவற்றில் சில இயற்கை வனப் பகுதி, கடல் கடந்துள்ள தீவுகள் உள்ளிட்ட சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டவை," என்றார். ஓசிபி ஆர்போரிட்டத்துடன் உயர்பாதையும் சேர்ந்து பூமலையில் இரு புதிய அம்சங்கள் இடம்பெறுகின்றன.

