இயற்கை சார்ந்த தீர்வுகளை நாம் கண்டறிவோம்

இயற்கை சார்ந்த தீர்வுகளை நாம் கண்டறிவோம்

2 mins read
5cd3f32d-b604-49dd-884e-ad8c155f7787
சுங்கை பூலோ ஈரநில பாதுகாப்பு வனப்பகுதியில் இயற்கை பூங்காவாக மாற்றப்பட உள்ள மண்டாய் சதுப்பு நிலப்பகுதி. படம்: தேசிய பூங்காக் கழகம் -

உயர்ந்து வரும் கடல்நீர் மட்டம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள சிங்கப்பூர் இயற்கை சார்ந்த தீர்வுகளைக் கையாளும். இதன்படி தான் முன்னெடுத்துள்ள திட்டங்களில், கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும் அப்பாற்பட்டதாக இத்தீர்வுகள் அமையும் என்று நேற்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறினார்.

"சதுப்பு நிலம் போன்று இயற்கையாகவே அமைந்த தற்காப்புகளை வலுப்படுத்த, பொறியியல் ரீதியான அணுகுமுறைகளை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். இதனால் கரையோர மண்ணரிப்பைக் குறைத்து சதுப்பு நிலப் பகுதிகளையும் பழைய நிலைக்குக் கொண்டுவருகிறோம்," என்றார் திரு மசகோஸ்.

பருவநிலை மாற்றம் தொடர்பில் அரசு குழு சந்திப்புக்கு முன் அவர் நேற்று இவ்வாறு பேசினார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் லீ சியன் லூங்கின் தேசிய தின பேரணி உரையைத் தொடர்ந்து, கடல்நீர் மட்ட உயர்வை எதிர்கொள்ள இயற்கை சார்ந்த தீர்வுகள் குறித்து அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது இதுவே முதன்முறை.

தாழ்வான நிலப்பகுதியை ஏற்படுத்தி அதைச் சுற்றி அணைகள் எழுப்புவது நில மீட்பு உத்திகளில் ஒன்றாகும். இதுபோன்ற தீர்வைக்கொண்டு ஈஸ்ட் கோஸ்ட் அருகே உள்ள தீவுகளை மீட்டு, உயர்ந்து வரும் கடல்நீர் மட்டத்தைச் சமாளிக்கலாம் என்பது குறித்து பிரதமர் லீ குறிப்பிட்டிருந்தார்.

அவரது உரையை அடுத்து இயற்கை சார்ந்த தீர்வுகளை சிங்கப்பூர் கருத்தில் கொள்ளுமா என்று விஞ்ஞானிகள் வினா எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இயற்கை சார்ந்த தீர்வுகள் தொடர்பில் நாட்டில் உள்ள இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மரங்கள் குறித்தும் திரு மசகோஸ் பேசினார்.

வன மறுசீரமைப்பு செயல் திட்டத்தின்கீழ் மேலும் 250,000 மரங்களும் செடிகளும் நடப்படும் என்றார் அவர். இதனால் நாட்டின் பல்லுயிர் தன்மைக்கு ஆதரவளிப்பது, பருவநிலை மாற்றத்தைக் குறைப்பது, நமது மீள்திறனை வலுப்படுத்துவது என்று பலன்கள் பல என்றார் அவர்.

சிங்கப்பூர் அதன் பலவீனங்களை நன்கு அறிந்துள்ளது. ஆனால் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் சந்திப்பதற்கு இதுபோன்ற முன்னேற்பாடுகள் தேவை என்றார் திரு மசகோஸ்.