எல்டிடிஇ தொடர்பான கைதுகள்; பொறுமையுடன் இருக்க குடும்பத்தாருக்கு வேண்டுகோள்

எல்டிடிஇ தொடர்பான கைதுகள்; பொறுமையுடன் இருக்க குடும்பத்தாருக்கு வேண்டுகோள்

1 mins read
f15b66f7-b7af-4785-9091-e1332c99d186
-

தமிழ் ஈழ விடுதலைப்புலி இயக்கத்துடன் (எல்டிடிஇ) தொடர்புகளை வைத்திருந்ததன்பேரில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட சிலரது குடும்பத்தினரிடம் விசாரணை முடியும் வரை அமைதி காக்குமாறு அந்நாட்டு போலிஸ் தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் தொடர்பில் 12 தனிநபர்களை போலிசார் மேலும் விசாரிக்க வேண்டும் என்று மலேசிய இன்ஸ்பெக்டர்-ஜெனரல் ஹமித் பாடுர் தெரிவித்தார். கைதானவர்களில் இருவர் மலாவையும் நெகிரி செம்பிலானையும் சேர்ந்த மாநில அவை உறுப்பினர்கள்.

விசாரணை பத்திரங்களைத் தயாரித்து முடிக்க விசாரணைக் குழு துரிதமாகச் செயல்படுவதாக அவர் கூறினார். இந்தப் பத்திரங்கள் தலைமைச்சட்ட அதிகாரி அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு நீதிமன்ற விசாரணை செய்யவேண்டுமா இல்லையா என்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

"தீபாவளி நெருங்கி வருவதால் நான் அந்தக் குடும்பங்களுக்காக மிகவும் அனுதாபப்படுகிறேன்," என்று அவர் தெரிவித்தார். "ஆயினும் நாங்கள் நாட்டின் நலனையும் பாதுகாப்பையும் கருதி செயல்படவேண்டியுள்ளது,"

"எங்கள் மீது வருத்தத்துடன் இருக்கும் குடும்பத்தினர் தயவுசெய்து பொறுத்திருங்கள். தடுப்புக்காவலில் இருப்பவர்கள் அனைவரும் நன்றாகப் பார்த்துக்கொள்ளப்படுகின்றனர் என்பது உறுதி. அவர்களது குடும்பத்தினர் வந்து பார்க்கலாம். நாங்கள் அவர்களை அனுமதிப்போம்," என்றார் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் பாடுர்.

தடுப்புக்காவலில் இருப்போரின் குடும்பத்தினர் சிலர் புக்கிட் அமானில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.