மூதாட்டி ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்து அவரைக் கொன்றதன் பேரில் வேலையில்லாத ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்த 85 வயது பெண் கடந்த மாதம் கொல்லப்பட்டதன் தொடர்பில் 27 வயது கே. சத்தியராஜ் கோலாலம்பூரின் அம்பாங் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
செப்டம்பர் 19ஆம் தேதி காலை 11.40 மணிக்கும் பிற்பகல் 1 மணிக்கும் இடையே அந்த மூதாட்டி அம்பாங்கிலுள்ள ஜாலான் டாசிக் டம்பஹான் 2லுள்ள ஒரு வீட்டில் மாண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சத்தியராஜ், அம் பாங் அமர்வு நீதிமன்றத்தில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு மாறான உடலுறவு ஆகியவற்றுக்கான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த வழக்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் அமர்வு நீதிமன்றமும் அடுத்து டிசம்பர் 18ஆம் தேதி விசாரிக்கும்.
கைகள் கட்டப்பட்டும் தலை துணியால் போர்த்தப்பட்டும் இருந்த நிலையில் அந்த மூதாட்டியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் இதற்கு முன்னதாகத் தெரிவித்தன.
சத்தியராஜ் குற்றவாளி என்பது நிரூபணமானால் அவருக்கு கட்டாயமாக மரண தண்டனை விதிக்கப்படும்.

