முழுநேர தேசிய சேவையாளர் லியூ காயின் மரணத்தை விளைவித்ததன்பேரில் சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். கடந்தாண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நிகழ்ந்த பயிற்சியின்போது நேர்ந்த அந்த மரணத்தின் தொடர்பில், 28 வயது கேப்டன் ஓங் லின் ஜியே மீது முன்யோசனையின்றி செயல்பட்டு ஒருவரது மரணத்தை விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
22 வயது லியூ, சிங்கப்பூர் ஆயுதப்படையின் மேற்கு போக்குவரத்து மையத்தில் பணிபுரிந்தார். 'பயோனிக்ஸ் இன்ஃபண்ட்ரீ' கவச வாகனம் பின்னால் நகர்ந்து லேண்ட் ரோவரை ஓட்டிக்கொண்டிருந்த முதலாம் நிலை கார்ப்பரல் (சிஎஃபசி) லியூவை மோதி அவரது உயிரைப் பறித்தது.
சம்பவம் நடந்த தினமன்று, பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் லியூவை லேண்ட் ரோவர் வாகனத்தை ஓட்டுமாறு பணித்தார். ஓங் அந்தப் பயிற்சியைப் பார்வையிட்டு அதில் பங்கெடுத்த துருப்பினரை மதிப்பிட வேண்டியிருந்தது.
சம்பவத்தின்போது பயானிக்ஸ் கவச வாகனத்திற்குள் நான்கு தேசிய சேவையாளர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சிங்கப்பூரின் கவச வாகன தளபத்தியத்தின் 42ஆம் பட்டாளத்தைச் (42nd Battalion Singapore Armoured Regiment) சேர்ந்த முழுநேர தேசிய சேவையாளர்கள். கவச வாகனம் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்யும் வெவ்வேறு பொறுப்புகள் அவர்களுக்குத் தரப்பட்டிருந்தன. முறையாகப் பயிற்சி பெற்று, அவர்கள் விதிமுறைகளின்படி ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகே 'முராய் அர்பன்' பயிற்சி வளாகத்தில் இந்தப் பயிற்சியைத் தொடங்கியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பத்து மணிக்குச் சற்று நேரம் முன்னதாகப் பயிற்சியில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் பயோனிக்ஸ் கவச வாகனத்தை முந்திச் செல்வதை அதற்குள் இருந்த பணியாளர்கள் கண்டனர். அப்போது அந்தக் கவச வாகனம், பயோனிக்ஸ் வாகன கட்டுப்பாட்டாளரின் (vehicle commander) உத்தரவின்படி நின்றது. பயோனிக்ஸ் வாகனத்தைச் சற்றுத் தொலைவிலிருந்து பின்தொடர்ந்து கொண்டிருந்த லேண்ட் ரோவரை அதே உத்தரவின்படி லியூ நிறுத்தினார்.
பயிற்சியாளர் அப்போது சிஎஃப்சி லியூவிடம் பயோனிக்ஸ் வாகனத்தை முந்திக்கொண்டு லேண்ட் ரோவரை ஓட்டுமாறு கட்டளையிட்டார்.
சிஎஃப்சி லியூ அப்போது லேண்ட் ரோவரை பயோனிக்ஸ் வாகனத்திலிருந்து 19.8 மீட்டர் தொலைவில் நிறுத்தியதாக இந்தச் சம்பவத்தை விசாரித்த சிறப்புக் குழு கண்டுபிடித்தது. பயிற்சி விதிமுறைகளின்படி லியூ அந்த வாகனத்தை 30 மீட்டர் தூரத்தில் நிறுத்தியிருக்கவேண்டும் என்று அந்தக் குழு கூறியது. லேண்ட் ரோவர் நிறுத்தப்பட்டு நான்கு வினாடிகள் கழிந்த பிறகு பயானிக்ஸ் வாகனம் பின்புறமாகச் செல்லத் தொடங்கியது. அந்த வாகனத்தை நிறுத்தச் சொல்ல வாகனங்களின் பின்பக்க வழிகாட்டி ஒட்டுநர் பல முறை கோரியபோதும் ஓட்டுநர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை என்றும் முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் படங்களைப் பரப்பியதன் தொடர்பில் மேலும் ஐவர் அதிகாரபூர்வ ரகசியங்கள் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். அந்த ஐவரில் இருவரான முகம்மது ஆரிஃப் அஸ்மானும், முகம்மது ஹைகல் முகம்மது அபிதினும் சம்பவ இடத்தில் அதனைத் தங்கள் கைப்பேசிகளில் படமெடுத்தனர். அந்தப் படங்களை அவர்கள் 'வாட்ஸ்அப்' வழியாக அனுப்பதியாகக் கூறப்படுகிறது. அந்தப் படங்களைப் பெற்ற பிரேண்டன் டான் ஜியென் ஜெட், துங் யூ சுவென், முகம்மது ஸாக்கி ஹஜ்ஜி மொக்தார் ஆகியோர், படங்களின் ரகசியத்தன்மையைப் பற்றி தெரிந்திருந்தும் உரிய அனுமதியின்றி அவற்றை மேலும் சிலருக்கு அனுப்பியதன்பேரில் குற்றம் சாட்டப்படுள்ளனர்.

