லிட்டில் இந்தியாவுக்கு அருகிலுள்ள மிடில் ரோட்டில் ஆடவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பெண், திடீரென தனது ஆடைகள் அனைத்தையும் கழற்றினார்.
சிவப்பு நிறச் சட்டை அணிந்திருந்த அந்த ஆடவரைத் துரத்திக்கொண்டிருந்த அந்த 31 வயது பெண், அவரைப் பார்த்து கூச்சலிட்டுக்கொண்டே தனது ஆடைகள் அனைத்தையும் கழற்றியதை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளி காட்டுகிறது. ஆத்திரத்தில் புத்தி பேதலித்ததுபோல காணப்பட்ட அந்தப் பெண்ணை, வெள்ளை நிறச் சட்டை அணிந்திருந்த மற்றோர் ஆடவர் சம்பவ இடத்திலிருந்து அழைத்துச் சென்றதும் அந்தக் காணொளியில் தென்பட்டது.
உதவிக்கான அழைப்பு வியாழக்கிழமை அதிகாலை 2.11 மணிக்கு போலிசாருக்குக் கிடைத்தது. பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்ததன்பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சம்பவத்தைத் தொடர்ந்து விசாரிப்பதாக போலிசார் தெரிவித்தனர். பொது இடத்திலோ அல்லது பொதுமக்கள் காணும் விதமாகத் தனியார் இடத்திலோ நிர்வாணமாகக் காட்சியளிப்பது சிங்கப்பூரில் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்காக மூன்று மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை, 2,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

