பருவநிலை மாற்றத்துக்கு தொல்லுயிர் எச்ச எரிபொருள்கள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பது பற்றிய விழிப்புணர்வு பெருகிவரும் வேளையில் அதிக அளவிலான ஆற்றலை சூரியனிடமிருந்து பெற சிங்கப்பூர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது பெறப்படும் சூரிய சக்தியின் அளவைவிட ஏழு மடங்குக்கும் அதிகமான அளவிலான சூரிய சக்தி பயன்பாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் நடப்புக்குக் கொண்டுவர சிங்கப்பூர் விரும்புகிறது. தற்போது பெறப்படும் 260 மெகாவாட் திறன் சூரிய சக்தி 2 கிகாவாட்டாக உயர்த்தப்பட உள்ளது.
அதிகரிக்கப்படும் சூரிய சக்தி உற்பத்தி சுமார் 350,000 இல்லங்களுக்குத் தேவையான மின்சக்தியை வழங்கும் திறன்கொண்டதாக இருக்கும். அதாவது, சிங்கப்பூரின் மொத்த மின்சாரத் தேவையில் 4 விழுக்காட்டை அது சரிக்கட்டும்.
சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு மையத்தில் இன்று காலை நடைபெற்ற சிங்கப்பூர் அனைத்துலக ஆற்றல் வாரத்தின் தொடக்க நிகழ்ச்சியில் வர்த்தக, தொழில்துறை அமைச்சர் சான் சுன் சிங் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் ஆற்றல் தேவையில் சுமார் 1% சூரிய சக்தியிலிருந்து தற்போது பெறப்படுகிறது.


