பங்காளித்துவ உறவை அதிகரிக்க இந்தியா தயார்

பங்காளித்துவ உறவை அதிகரிக்க இந்தியா தயார்

2 mins read
17e4bc2a-4c6c-4208-b237-57b872c26977
நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலிசாரால் தடுத்து வைக்கப்பட்ட ஒரு பெண் ஆர்ப்பாட்டக்காரர். படம்: ராய்ட்டர்ஸ் -

ஆசியானுடன் இந்தியா அதன் பங்காளித்துவ உறவை அதிகரித்துக்கொள்ள தயாராக உள்ளது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறினார். தாய்லாந்து தலைநகரான பேங்காக்கில் நடைபெற்ற 16ஆவது ஆசியான்-இந்தியா உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட திரு மோடி, வந்திருந்த தென்கிழக்காசிய தலைவர்கள் முன்னிலையில் இவ்வாறு தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையே விமான வழிப் போக்குவரத்து, தரைவழிப் போக்குவரத்து, கடல்வழிப் போக்குவரத்து ஆகிய தொடர்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என திரு மோடி குறிப்பிட்டார்.

ஒருங்கிணைந்த, வலிமையான, பொருளாதார வளமிக்க ஆசியான் நாடுகளின் நலனில் இந்தியாவின் நலனும் அடங்கியுள்ளதாக அவர் கூறினார்.

ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என தமது உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, கிழக்காசிய நாடுகள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஆசியான் மையமாக உள்ளது என்றார்.

ஆசியான் நாடுகளின் ஒற்றுமையும் பொருளாதார செழிப்பும் இந்தியாவின் நலன்களுக்கும் முக்கியமானது எனவும் திரு மோடி குறிப்பிட்டார்.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள மேம்பாடு குறித்து இந்த உச்சநிலை மாநாட்டில் பேசப்பட்டது. இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடியும் தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஓ-சாவும் இணைந்து தலைமை தாங்கினர். பொருளியல் ஒருங்கிணைப்பு, வட்டாரப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையுடன் கூடிய மேம்பாடு தொடர்பில் இந்தியா ஆசியானைக் கூடுதலாக ஈடுபடுத்தலாம் என மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் லீ சியன் லூங் அழைப்பு விடுத்தார். வட்டாரத்தின் இணையத் திறனையும் மீள்திறனையும் வலுவாக்க உதவ தாம் இந்தியாவின் பங்காளித்துவ உறவைப் பெற விரும்புவதாகவும் திரு லீ சொன்னார்.

வட்டார நிலையிலான முழுமையான பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அடுத்தாண்டுக்குத் தள்ளி வைக்கப்படும் என நேற்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை கூறியது. உலகின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளித்துவமாக விளங்கும் இது, தென்கிழக்காசியத் தலைவர்கள் தெரிவித்த வரைவு அறிக்கையின்இபடி 2020ஆம் ஆண்டுக்குத் தள்ளிவைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.