காணாமல் போன மூன்று முக்குளிப்பாளர்களைத் தேடும் பணிகள் நான்காவது நாளாக புதன்கிழமை காலை தொடர்கிறது. இந்தோனீசியாவின் சுண்டா நீரிணையில் பன்டென் மாநிலத்திற்கு அருகிலுள்ள சங்கியாங் தீவில் காணாமல் போனதாக நம்பப்படும் அம்மூவரில் ஒருவர் சிங்கப்பூரர் எனக் கூறப்படுகிறது.
தேடல் மேற்கொள்ளப்படும் இடங்கள் நான்கு வட்டாரங்களாக வகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த பரப்பளவு 300 சதுர கடல் மைல்கள்.
இந்தோனீசியாவின் மீட்புப் படை குறைந்தது மூன்று கப்பல்களைக் கொண்டு தேடுதல் பணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் ஈடுபட்டு வருகிறது.
வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் ஆறு சுற்றுப்பயணிகள் இரு குழுக்களாக முக்குளிப்புக்குச் சென்றிருந்தனர். அதில் ஒரு சிங்கப்பூரரும் சீனாவைச் சேர்ந்த இருவரும் கொண்ட ஒரு குழு திரும்பவில்லை.
ஜகார்த்தாவிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகம் சம்பந்தப்பட்ட சிங்கப்பூரரின் குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

