மின்ஸ்கூட்டர் தடை; அமைச்சரிடம் முறையீடு

சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்தை நேற்று நேரில் சந்தித்த முப்பதுக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டல விநியோகிப்பாளர்கள் தங்களுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். நடைபாதைகளில் மின் ஸ்கூட்டர் ஓட்ட தடை விதிக்கப்பட்டதால் தங்களுடைய வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். செவ்வாய்க்கிழமை அன்று மின்ஸ்கூட்டருக்கு விதிக்கப்பட்ட  தடை அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் ஈசூனில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது அமைச்சரை உணவு விநியோகிப்பாளர்கள் சந்தித்தனர்.

“சந்திப்பு நல்ல முறையில் நடந்தது. மற்றொரு முறையும் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று ஃபேஸ்புக் பதிவில் அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டிருந்தார்.

 

நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், தனது கிளை அலுவலகத்திலிருந்து வெளியே சென்று மற்றவர்களைச் சந்திப்பதற்கு முன்பு மேலும் மூன்று உணவு விநியோகிப்பாளர்களைச் சந்தித்தார்.

“தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி அவர்களுக்கு விளக்கினேன், அவர்களும் தங்களுடைய பிரச்சினைகளையும் சிரமங்களையும் தெரிவித்தனர்,” என்றார் அமைச்சர்.

உணவு விநியோகிப்பாளர்களின் நிலையைப் புரிந்து கொள்வதாகக் கூறிய அவர், அவர்களுடைய கருத்தை போக்குவரத்து அமைச்சிடமும் அமைச்சரவையிலும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.