மின்னிலக்கப் பொருளியல் மும்மடங்கு வளர்ச்சி பெறும்

மின்னிலக்க யுகத்தில் சிறந்தோங்க வெளிப்படையானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் சிங்கப்பூர் திகழ வேண்டும் என்று தொடர்பு தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 

உலகமயமாதலும் தொழில்நுட்ப மாற்றமும் அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஊழியர்களும் வர்த்தகங்களும் இடம் மாற அவை காரணமாக விளங்கக்கூடும் என்றும் அவர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார்.

மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலில் நடைபெற்ற ஏஷியா ஹவுஸ் உலக வர்த்தக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சுமார் 300 வர்த்தக, அரசாங்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அமைச்சர் எஸ் ஈஸ்வரன், எல்லை தாண்டிய தரவு பரிமாற்றம் கடந்த 2017ஆம் ஆண்டு அதிகமாக இருந்ததெனக் குறிப்பிட்டார். 12 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்டதைக் காட்டிலும் 150 மடங்கு அது அதிகமாக இருந்தது என்றார் அவர். 

தெற்காசியாவில் மட்டும் மின்னிலக்கப் பொருளியல் 2025ஆம் ஆண்டுவாக்கில் மும்மடங்கு வளர்ந்து US$300 மில்லியனுக்கு (S$408 மில்லியன்) உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

“மின்னிலக்க யுகத்தில் சிறந்தோங்க, பொருளியல் சவால்களுக்கான சிங்கப்பூரின் பங்கு, வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெறும் வகையில் வெளிப்படையானதாக நீடிக்க வேண்டும். 

“அத்துடன் வாய்ப்புகள் அனை வருக்கும் பகிர்ந்தளிக்கப்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.தொழில்நுட்பத்தைத் தழுவவும் பொருளியல் ஒருங்கிணைப்புக்கும் நாம் எடுக்கக்கூடிய முயற்சிகள் பலன்களை சரிசமமாகப் பிரித்துக் கொடுப்பதன் அடிப்படையில் அமைய வேண்டும்,” என்றார் திரு ஈஸ்வரன்.

மின்னிலக்க உருமாற்றம் வேலைகள், வர்த்தகங்கள் ஆகி யவற்றோடு பொருளியலுக்கும் இடையூறு ஏற்படுத்தும் என்றார் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு எஸ் ஈஸ்வரன்.

2030ஆம் ஆண்டுக்குள் உலக ஊழியரணியில் 14 விழுக்காடு அல்லது 375 மில்லியன் ஊழியர்கள் புதிய வேலைகளைத் தேடவேண்டி இருக்கும் என்று மெக்கின்சி என்னும் உலக வர்த்தக ஆலோ சனை நிறுவனம் மதிப்பிடுகிறது.

மின்னிலக்க யுகத்திற்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட வர்த்தக உடன் பாடுகள்  இந்தப் புதிய பொருளியல் நிலவரங்களுக்கும் வர்த்தக பாணி களுக்கும் ஏற்ற வகையில் வடி வமைக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறினார். 

“எனவே உலக வர்த்தக உடன்பாடுகளைப் புதுப்பித்தலிலும் அல்லது புதிய ஏற்பாடுகளைச் செய்துகொள்வதிலும் கவனம் இருக்கவேண்டும். 

“மின்னிலக்கப் பரிவர்த்தனைகள் மற்றும் தரவுப் பகிர்வு ஆகி யவற்றைப் பயன்படுத்திக்கொள்ள இது அவசியம்,” என்றார் அவர்.