பாத்தாமில் பாலம் இடிந்தது; 26 சிங்கப்பூரர்கள் காயம்

இந்தோனீசியாவின் பாத்தாமிலுள்ள மொன்டிகோ ரிசார்ட்ஸ் நொங்சா நட்சத்திர விடுதியில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாலம் ஒன்று உடைந்து விழுந்ததில் 26 சிங்கப்பூரர்கள் காயமடைந்தனர்.

அந்தப் பாலத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் நின்றிருந்ததால் பாலம் இடிந்து விழுந்ததாக நேற்று விடுதி நிர்வாகம் தெரிவித்தது.

அந்தப் பாலத்தின் அடிப்படைக் கட்டுமானம் வலுவற்று இருந்திருக்கலாமென ரியாவ் தீவுகள் மாகாணத்தின் போலிஸ் பேச்சாளர் கூறியதாக தகவல்கள் பரவின.

ஆனால், அதனை மறுத்த விடுதி நிர்வாகம் பாலத்தின் அடிப்படை வலுவாக இருப்பதாகவும் அடிக்கடி பராமரிக்கப்பட்டு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டது.

கடல் மட்டத்திலிருந்து மூன்று மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அந்த மரப்பாலம், 2012ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மெண்டாக்கி சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 100 ஊழியர்கள் பாத்தாமில் உள்ள அந்த விடுதியில் பணித் திட்டத்தைப் பற்றி விவாதிக்கும் சந்திப்புக்காகச் சென்றிருந்தனர். அவர்களில் 30 பேர் அந்தப் பாலத்தின் மீது நின்று குழு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் மீதிருந்த 26 பேர் கடலில் விழுந்தனர்.

கீழே விழுந்ததில் காயமடைந்த 26 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் சிங்கப்பூருக்குத் திரும்பினர்.

அவர்களில் இருவருக்கு சிங்கப்பூரிலும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். ஒருவருக்கு கணுக்காலிலும் மற்றவருக்கு விலா எலும்பிலும் முறிவுகள் ஏற்பட்டுள்ளன.