பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஊழியர்களுக்கு $7 மி. உதவித் திட்டம்

நடைபாதைகளில் மின்-ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்டுள்ள உணவு விநியோக ஊழியர்களுக்காக $7 மில்லியன் உதவித் தொகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மின்-ஸ்கூட்டர்களுக்குப் பதிலாக அவர்கள் வேறு வாகனங்களை வாங்கிக்கொள்ள இந்த நிதி உதவும்.

இந்தத் திட்டத்தின் கீழ், தங்களது மின்-ஸ்கூட்டர்களை திருப்பித் தரும் உணவு விநியோக ஊழியர்கள் மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிள் வாங்கிக்கொள்வதற்காக அவர்களுக்கு $1,000 வரை வழங்கப்படும். அல்லது சைக்கிள் வாங்க விரும்புபவர்களுக்கு $600 வழங்கப்படும்.

சிங்கப்பூர் அரசாங்கமும் இங்குள்ள மூன்று பெரிய உணவு விநியோகிப்பு நிறுவனங்களும் சேர்ந்து இந்த நிதியை அமைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. 

அடுத்த வெள்ளிக்கிழமையிலிருந்து தங்களது மின்-ஸ்கூட்டர்களை உணவு விநியோக ஊழியர்கள் திருப்பிக் கொடுக்கலாம்.

நடைபாதைகளில் மின்-ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை தங்களது வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக பல உணவு விநியோக ஊழியர்கள்  எழுப்பிய அக்கறைகளின் தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல ஊழியர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து தங்களது பிரச்சினைகளை முன்வைத்தனர்.

சுமார் 7,000 உணவு விநியோக ஊழியர்கள் மின்-ஸ்கூட்டர்களை பயன்படுத்தி வந்தனர்.

‘கிராப்’, ‘டெலிவரூ’, ‘ஃபுட்பாண்டா’ ஆகிய உணவு விநியோக நிறுவனங்கள் இந்த நிதித் திட்டத்தை நிர்வகிக்கும் என்று குறிப்பிட்ட அதிகாரிகள், சைக்கிள்கள் அல்லது மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிள்களை மொத்தமாக வாங்கவும் திட்டமிடுவதாகத் தெரிவித்தனர்.

நவம்பர் 7ஆம் தேதிப்படி மின்-ஸ்கூட்டரைப் பயன்படுத்தி உணவு விநியோகிக்கும் ஊழியராக இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறத் தகுதிபெறுவர். அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை இந்த உதவித் திட்டம் நடப்பில் இருக்கும்.