வேல்முருகனின் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை

நொவீனாவில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் அண்மையில் நிகழ்ந்த பாரந்தூக்கி விபத்தில் மரணமடைந்த இந்திய ஊழியர் திரு வேல்முருகனின் குடும்பத்திற்கு உதவ அந்தக் கட்டுமானத் தளத்தின் முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து செயலாற்றி வருவதாக வெளிநாட்டு ஊழியர் நிலையம் தெரிவித்துள்ளது.

பணிக்கால காய இழப்பீட்டுச் சட்டத்தின்கீழ் திரு வேல்முருகனின் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத் தருவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்றும் அதற்கு மூன்று முதல் ஆறு மாதங்கள்வரை ஆகலாம் என்றும் அந்த நிலையம் கூறி இருக்கிறது.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் திரு வேல்முருகனின் குடும்பத்திற்கு இடைக்கால உதவியாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக நிலையம் குறிப்பிட்டது.

அத்துடன், இடைக்காலமாகவும் இழப்பீட்டுச் சட்டத்தின் மூலமும் கிடைக்கும் நிதியைக் கொண்டு, தமது வயிற்றில் இருக்கும் குழந்தையின், தம் குடும்பத்தினரின் வாழ்க்கைக்கு ஆதரவளிப்பது எப்படி என்பது குறித்த நிதியறிவை திரு வேல்முருகனின் மனைவிக்கு வழங்கவும் முயற்சி எடுத்து வருவதாக நிலையம் தெரிவித்தது.

சாரக் கம்பிகளைத் தூக்கியபோது பாரந்தூக்கியின் நீண்ட இரும்புக்கரம் போன்ற அமைப்பு முறிந்து விழுந்ததில் 28 வயதான திரு வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இம்மாதம் 4ஆம் தேதி இந்த விபத்து நிகழ்ந்தது.

சிங்கப்பூரில் பணியாற்றி வரும் திரு வேல்முருகனின் உறவினர் ஒருவர் மூலம் அவரது நல்லுடல் கடந்த புதன்கிழமை இந்தியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

வயதான பெற்றோர், கர்ப்பிணி மனைவி, இளைய சகோதரர் என நால்வரைக் கொண்ட திரு வேல்முருகனின் குடும்பம், அவர் ஒருவரின் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்தது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான அனுபவத்தில் பார்க்கும்போது, இதுபோன்ற சம்பவங்களில் பணிக்கால காய இழப்பீட்டுச் சட்டத்தின்கீழ் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகையாக $100,000க்கு மேல் கிடைக்கலாம் என்று வெளிநாட்டு ஊழியர் நிலையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, ‘இட்ஸ் ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ்’ என்ற இணையவழி நிதித் திரட்டு அமைப்பு, தனது பிரசாரத்தின்மூலம் திரு வேல்முருகனின் குடும்பத்திற்காக இதுவரை $158,000 தொகையைத் திரட்டி உள்ளது. நன்கொடையாளர்களுக்கு வெளிநாட்டு ஊழியர் நிலையம் நன்றி தெரிவித்துக்கொண்டது.

பாரந்தூக்கி விபத்தில் பதான், 35, என்ற பங்ளாதேஷ் ஊழியரும் காயமடைந்தார். சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து திரும்பிய அவருக்குத் தங்குமிட வசதியை ஏற்பாடு செய்து தந்துள்ள அவரது நிறுவனம், முழுமையாகக் குணமடையும் வரை

அவரது தேவைகளைப் பார்த்துக்கொள்ள உடன் பணிபுரியும் ஊழியர் ஒருவரை பணியமர்த்தி இருப்பதாகவும் வெளிநாட்டு ஊழியர் நிலையம் தெரிவித்தது.

இந்த விபத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள பிற ஊழியர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ‘மஞ்சள் நாடா சிங்கப்பூர்’ இயக்கத்தின் பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் மூலம் உடனடியாக ஆலோசனை வழங்கும் நோக்கில் அணுக்கமாக இணைந்து பணியாற்றுவோம் என்றும் அந்நிலையம் கூறியிருக்கிறது.

Loading...
Load next