முதலாளியின் குழந்தையைக் காப்பாற்றி, விபத்தில் மாண்ட இந்திய பணிப்பெண் ஓர் ஒற்றைப் பெற்றோர்

முதலாளியின் குழந்தையைக் காப்பாற்றி, விபத்தில் மாண்ட இந்திய பணிப்பெண் ஓர் ஒற்றைப் பெற்றோர்

2 mins read
a0dcdf35-9015-4e1b-9ebd-4709f9d40f1b
லென்டோர் அவென்யூவில் கார் ஒன்றில் சிக்கி மடிவதற்கு முன்பாக குழந்தை இருந்த தள்ளுவண்டியைப் பாதுகாப்பான இடத்துக்குத் தள்ளிவிட்டார் ஜஸ்பிரீட் கவுர். படம்: ஸ்டோம்ப் -

இரண்டு வயதுக் குழந்தையைப் பாதுகாப்பான இடத்துக்கு தள்ளி விட்டுவிட்டு, விபத்திலிருந்து தப்ப முடியாமல் பலியான பணிப்பெண் ஜஸ்பிரீட் கவுர், பணிக்குச் சேர்ந்து மூன்று மாதங்களே ஆனாலும் வீட்டின் ஓர் அங்கத்தினரைப்போலவே இருந்தார் என்று வீட்டின் முதலாளி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கவுர் ஒற்றைப் பெற்றோர் என்றும் அவரது ஏழு வயது மகளை கவுரின் தாயார் பார்த்துக்கொள்வதாகவும் கூறப்பட்டது. கவுருக்கு இரண்டு இளைய சகோதரர்கள் இருப்பதாகக் கூறப்பட்டது.

புல்லியன் பார்க் கொண்டோமினியத்தில் கவுர் வேலை பார்த்த வீட்டின் முதலாளி இந்திய நாட்டைச் சேர்ந்தவர்.

அனுதாபங்களைத் தெரிவிக்க வந்த அக்கம்பக்கத்தினர் கவுரின் குடும்பத்துக்கு உதவ முன்வந்ததாகவும் அந்தப் பணம் கவுரின் மகளின் நல்வாழ்வுக்கு உதவும் விதத்தில் அவர்களைச் சென்றடைய வேண்டி, ஏற்பாடுகள் செய்வதாகவும் அவரது முதலாளி தெரிவித்தார். கவுரின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

கவுரின் உடல் நேற்று மாலை இந்தியாவுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டது.

பணிப்பெண்ணாக வேலை செய்வது முதல்முறையாக இருந்தபோதும் தனது பணியை கவுர் செவ்வனே செய்து வந்தார் என்றார் வீட்டின் முதலாளி. குழந்தையை விளையாட்டுத் திடலுக்கு அழைத்துச் செல்வது, அவனுக்குப் புத்தகங்கள் வாசித்துக்காட்டுவது ஆகியவற்றுடன் நிற்காமல் அவனுடன் சேர்ந்து நடனமாடும் அளவுக்கு நெருக்கம் காட்டினார் கவுர்.

இம்மாதம் 5ஆம் தேதி முதலாளியின் மகனை அவனது தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் சென்றுகொண்டிருந்த கவுர், லென்டோர் அவென்யூவில் கார் ஒன்றில் சிக்கி மடிவதற்கு முன்பாக குழந்தை இருந்த தள்ளுவண்டியைப் பாதுகாப்பான இடத்துக்குத் தள்ளிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைக்கு சிறிய அளவில் கிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.