‘மக்கள் கட்சியாகவே மசெக இருக்கவேண்டும்’

மக்கள் செயல் கட்சி என்றுமே மக்களின் கட்சியாக இருக்கவேண்டும் என்று கூறினார் பிரதமர் லீ சியன் லூங். கட்சியின் மாநாட்டு நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசிய திரு லீ, இனம் மற்றும் சமயத்தைத் தாண்டி சமூகத்தில் ஏற்படக்கூடிய ஆபத்தான பிளவுகளுக்கு எதிராக எச்சரித்தார்.

சில நாடுகளில் மக்களுக்கும் தலைவர்களுக்கும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அதே போக்கு சிங்கப்பூரிலும் வேரூன்றுவதை மக்கள் செயல் கட்சி அனுமதிக்கக்கூடாது என்று கட்சியின் தலைமைச் செயலாளராகவும் இருக்கும் திரு லீ அறிவுறுத்தினார்.

மக்களின் தேவைகளை வலியுறுத்தி அதற்கான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் அரசு கொள்கைகள் இருக்க வேண்டும் என்று கூறினார் திரு லீ. தலைவரோ சாதாரண உறுப்பினரோ மக்களுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு மக்களுக்காக சேவை ஆற்றவேண்டும் என்று கட்சி உறுப்பினர்களிடம் கூறினார்.

சில நாடுகளில் தலைவர்களிடத்தில் நம்பிக்கை இழந்த நிலையில் மக்கள் உள்ளனர். வழி வழியாக ஆட்சி செய்த கட்சிகளும் சாதாரண மக்களுக்கு உதவ வேண்டிய சமதர்மவாதக் கட்சிகளும்கூட வலுவிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஆட்சிமுறையைப் புரட்டிப் போடும் ஜனரஞ்சக போக்கு அதிகரித்துள்ளது. நிலைமையை மேம்படுத்தும் உத்தேசம் இல்லைஎன்றாலும் ஆட்சியைக் கவிழ்ப்பதே குறி. 

இந்தப் பிளவு சிங்கப்பூரில் ஏற்படக்கூடாது என்று திரு லீ கூறினார். நாட்டின் ஆட்சிமுறை சாமானிய சிங்கப்பூரர்களுக்கும் ஏற்ப இருந்தால் அவர்கள் அதைத் தங்கள் ஆட்சிமுறையாக வரவேற்பர் என்று சொன்னார். மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையைப் பெறுவதும் எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொள்வதும் மசெக இனி செய்யவேண்டியவை என்று தமது உரையில் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

 

லீ: மற்ற நாடுகளுடனான உறவுக்கு வலுவான  ஆட்சி உரிமை தேவை

அதிகரித்து வரும் ஒரு நிச்சயமற்ற வெளியுறவு சூழலில் நாடு பீடுநடை போட, அரசியல் தலைவர்களுக்கு மக்களின் முழு ஒத்துழைப்பு தேவை என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று கூறினார்.

இதனால் மக்கள் செயல் கட்சிக்கு அடுத்த பொதுத் தேர்தல் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய திரு லீ குறிப்பிட்டார்.

குறிப்பாக தலைமைத்துவம் அடுத்த தலைமுறைக்குக் கைமாறும் இக்காலகட்டத்தில் மசெகவின் ஆட்சி உரிமை வலுவாக இருக்குமா என்று மற்றவர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்று கூறினார் பிரதமர்.

மக்கள் செயல் கட்சி ஆட்சிக்குத் திரும்புவதுடன் நின்றுவிடாமல் நீண்ட காலத்திற்கு நாட்டை ஆளும் நிலையைப் பெறவேண்டும். இதற்கு மக்கள் கட்சிக்கு ஒரு வலுவான ஆட்சி உரிமையைத் தருவதற்கு நம்பிக்கையூட்டவேண்டும் என்றார் அவர். இதன் தொடர்பில் சீன, அமெரிக்க உறவில் நெருக்கடி நிலவி வந்தாலும் இரு நாடுகளும் சிங்கப்பூரை எந்த நெருக்குதலுக்கும் ஆளாக்கவில்லை என்று கூறினார் திரு லீ. ஆனால் நெருக்கடி அதிகரிக்கும் பட்சத்தில், கொள்கை சார்ந்த முடிவையே சிங்கப்பூர் எடுக்கும் என்றும் தனிப்பட்ட எந்த ஒரு நாட்டிற்கும் சாதகமாகச் செயல்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் நம்பகத்தன்மையையும் சுயாட்சியையும் பாதுகாக்க இது ஒன்றே வழி என்றும் சொன்னார்.

மிக நெருக்கமான அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனீசியாவுடன் கொண்டுள்ள உறவில் குறையில்லாவிட்டாலும் தண்ணீர், வான்வெளி போன்ற பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன என்றும் அனைவருக்கும் சாதகமான ஒரு நிலையை அடைய அமைதியான முறையில் பேசி முடிவெடுக்கவேண்டும் என்றும் அவர் சுட்டினார்.

வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய நெருக்குதலைச் சமாளிக்க திறமையான அரசாங்கம் தேவை என்றும் மக்களின் ஆதரவுடன் இருதரப்பு சிக்கல்களைக் களையும் தலைவர்கள் வேண்டும் என்றும் திரு லீ கூறினார்.  
 

Loading...
Load next