கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு சிறுவன் கொலை; பெற்றோரிடம் விசாரணை

ஐந்து வயதுச் சிறுவன் பெற்றோர்களால் மிகக் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டதில் இறந்து போனதன் தொடர்பிலான வழக்கின் விசாரணை இன்று தொடங்கியது.

பூனைக்காக செய்யப்பட்ட கூண்டுக்குள் அடைத்தது, இடுக்கியால் தொடை, புட்டம் போன்ற பகுதிகளில் கிள்ளியது, துடைப்பம், உடைதாங்கி போன்றவற்றால் அடித்தது, சுடுநீரை மேலே ஊற்றியது போன்ற கொடூரமான செயல்களை சிறுவனுக்கு அவனது பெற்றோரே புரிந்ததாகக் கூறப்பட்டது.

2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அவன் இறந்துபோன தேதி வரை (அக்டோபர் 23, 2016) உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அந்தச் சிறுவன் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

உடலின் 70% இடங்களில் கடுமையான காயங்களுடன் சிறுவன் இறுதியாக மயங்கிச் சரிந்த பிறகும்கூட அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதை சுமர் 6 மணி நேரம் தாமதித்தனர் அவனது பெற்றோர்.

சிறுவனைத் துன்புறுத்தியது வெளியில் தெரிந்து பிரச்சினையில் மாட்டிக்கொள்வோமே என்ற பயத்தால் அவனது பெற்றோரான 27 வயது அஸ்லின் அர்ஜுனா, ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான் ஆகிய இருவரும் காலந்தாழ்த்தியதாகக் கூறப்பட்டது.

“மிகக் கொடூரமான இந்தக் கொலை துயரம் நிறைந்தது,” என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.

வேறு ஆதரவு எதுவும் இல்லாத நிலையில் மிகவும் மோசமாக, அதுவும் பெற்றோராலேயே சில மாதங்களுக்கு சிறுவன் துன்புறுத்தப்பட்டதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

ஒரே நோக்கத்துடன் சிறுவனைக் கொலை செய்தது, சிறுவனைத் துன்புறுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளைத் தம்பதியர் எதிர்நோக்குகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம்.

பிறந்து கொஞ்ச காலத்திலேயே வேறு ஒரு குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட சிறுவன், 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2015ஆம் ஆண்டு மே மாதம் வரை அந்தக் குடும்பத்தினருடன் இருந்தான். பின்னர் தனது பெற்றோருடனும் அவர்களது மற்ற பிள்ளைகளுடனும் தோ பாயோவில் உள்ள ஓரறை வீட்டில் வசிக்கத் தொடங்கினான் அவன்.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பல துன்பங்களை சிறுவன் அனுபவித்து வந்தான். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவனது தாய் அஸ்லின் அவனை துடைப்பத்தால் பலமுறை அடித்ததில் அவனது முழங்கால் சில்லு இடம் மாறியதையடுத்து, அவன் நொண்டியபடி நடக்க வேண்டியதாயிற்று.

சிறுவன் இறப்பதற்கு முன்பாக சில நாட்களில் அவன் மீது பல முறை சுடுநீர் ஊற்றப்பட்டதாகவும் அதனால் அவனது உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் அவனது மரணத்துக்கு அது முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

சிறுவன் இறப்பதற்கு முந்திய நாள் அவனது தந்தை ரிட்ஸுவான் அவனை துடைப்பத்தால் பலமுறை அடித்ததாகவும் பின்னர் அவன் மீது பல குவளை சுடுநீரை ஊற்றியதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சிறுவன் குளியலறைக் கதவின் மீது விழுந்ததாகவும் பின்னர் அசையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கேகே பெண்கள், சிறுவர் மருத்துவமனையில் பின்னர் அனுமதிக்கப்பட்ட சிறுவன் குறைவான உடல் வெப்பநிலை, குறைவான ரத்த அழுத்தம் ஆகியவற்றுடன் மிகவும் மோசமான நிலையில் இருந்தது கண்டுபிடிக்கபப்ட்டது. 

உடலின் பெரும்பாலான பகுதிகளில் இரண்டாம், மூன்றாம் நிலை தீக்காயங்கள், நீர்ச்சத்து வற்றிய நிலை, சிறுநீரகப் பாதிப்பு, பல காயங்களைக் கொண்ட முகம், உடைபட்ட மூக்கு, தொடர்ச்சியாகப் பேச இயலாமை போன்ற சிரமங்களால் அவன் பாதிக்கப்பட்டிருந்தான்.

அவனது உடலிலிருந்து அதிக அளவு ரத்தப்போக்கும் இருந்திருக்கலாம் என அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் மூத்த ஆலோசகரான இணைப் பேராசிரியர் லோ சீ ஃபூங் தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 14 மணி நேரத்தில் சிறுவன் உயிரிழந்தான் என்று குறிப்பிட்ட திரு ஃபூங், “கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சிறுவன் மிகக் கொடூரமான வலியை அனுபவித்திருப்பான்,” என்றார்.

சிறுவனின் தந்தையும் தாயும் இரு நாட்கள் இடைவெளியில் கைதாகினர்; பின்னர் மனநலப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டபோது தம்பதியருக்கு சமூக விரோதப் போக்கு இருந்தாலும் அவர்களுக்கு மனநலக் குறைபாடு இல்லை என்றும் அறியப்பட்டது.

விசாரணை தொடர்கிறது.