ஹாங்காங் டிபிஎஸ் வங்கியில் சிங்கப்பூர் பிரதமரை இழிவுபடுத்தும் விதத்திலான கிறுக்கல்கள் அழிக்கப்பட்டன

ஹாங்காங்கில் உள்ள டிபிஎஸ் வங்கிக் கிளையில் தாக்குதல் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அவரது குடும்பத்தாரையும் சிங்கப்பூரை ஆளும் மக்கள் செயல் கட்சியையும் இழிவுபடுத்தும் வகையில் கிறுக்கியிருப்பதாகக் கூறப்பட்டது. 

சேதப்படுத்தப்பட்ட டிபிஎஸ் வங்கிக் கிளையின் புகைப்படங்கள் இன்று (நவம்பர் 14) காலை ‘கன்சர்ண்ட் சிட்டிசன்ஸ் பேண்ட் டுகெதர் ஃபார் எ பெட்டர் சிங்கப்பூர்’ எனும் ஃபேஸ்புக் குழுவில் பதிவேற்றப்பட்டன. நான்கு மணி நேரத்துக்குள் அந்தப் பதிவு 850 முறை பகிரப்பட்டது.

இன்று காலை அந்தக் கிறுக்கல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனே அழிக்கப்பட்டுவிட்டதாக டிபிஎஸ் வங்கியின் பேச்சாளர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

கடந்த மாதம் ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற ஃபோர்ப்ஸ் குளோபல் சிஇஓ மாநாட்டில் பேசிய பிரதமர் லீ, ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பற்றிக் குறிப்பிட்டது, ஹாங்காங் மக்கள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களால் சிங்கப்பூரில் ஏற்படும் தாக்கம் குறித்த கேள்வி ஒன்றுக்கு, “வட்டாரம் நிலைத்தன்மையுடன் இருக்கும்போது சிங்கப்பூர் சிறப்பாகச் செயல்பட முயற்சி செய்கிறது;  மற்ற நாடுகள் வளம்பெறும்போது அவற்றுடன் சிங்கப்பூர் வர்த்தகம் செய்ய முடியும்,” என்று பிரதமர் லீ குறிப்பிட்டிருந்தார்.

ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதைக் குறிப்பிட்டு, அந்த நாட்டுடன் தற்போது வர்த்தகத்தில் ஈடுபடுவது எளிதல்ல என்றார் அவர். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகள், “ஹாங்காங்கின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டத்தைக் குறிக்கும் கோரிக்கைகள் அல்ல,” என்றும் அவை “அவமானப்படுத்தும், அரசாங்கத்தைக் வீழ்த்தும் நோக்கிலானவை,” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

நேற்று ஹாங்காங்கில் உள்ள டிபிஎஸ் வங்கிக் கட்டடத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தில் தீப்பற்றியது. அந்தப் படங்கள் இணையத்தில் வெகுவாகப் பரவின. ஆனால் டிபிஎஸ் வங்கிக் கட்டடம் அதனால் பாதிக்கப்படவில்லை என்று அதன் ஊழியர்கள் குறிப்பிட்டனர்.

ஹாங்காங்கில் உள்ள டிபிஎஸ் வங்கிக் கிளைகளில் எந்த இரண்டு இடங்களில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தன என்பது பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஹாங்காங்கில் டிபிஎஸ் வங்கி மொத்தம் 34 கிளைகளைக் கொண்டுள்ளது.

 

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity