துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவனின் தாய்: ‘என் சிறிய உடலுடன் எப்படி ஒரு குழந்தையை நான் கொல்ல முடியும்?’

மிக மோசமான சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்துபோன ஐந்து வயதுச் சிறுவனின் தாயான அஸ்லின் அருஜுனா, சிறுவனைக் கொல்ல தாம் எண்ணம் கொள்ளவில்லை என்று சிறுவன் இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு போலிசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

“நான் எப்படி ஒரு குழந்தையைக் கொல்வேன்? என்னுடைய சிறிய உடலைப் பாருங்கள்,” என்று போலிசாரிடம் குறிப்பிட்டது நீதிமன்றத்தில் இன்று விசாரணையின்போது வாசித்துக் காட்டப்பட்டது.

“சிறுவன் என்னிடம் வித்தியாசமான போக்கைக் காட்டாதிருந்தால் அவன் மீது சுடுநீரை ஊற்றும் எண்ணம் எனக்கில்லை,” என்று அஸ்லினா மற்றொரு வாக்குமூலத்தில் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அஸ்லினும் அவரது கணவரான ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மானும் சிறுவனைக் கொல்லும் பொதுவான நோக்கத்துடன் அவன்மீது சுடுநீரை ஊற்றி கடுமையான காயம் ஏற்படுத்தியதன் தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுவனை சிறிய பூனைக் கூண்டுக்குள் அடைத்து வைத்தது, இடுக்கியைக் கொண்டு சிறுவனின் தொடையில் கிள்ளியது, துடைப்பத்தால் அவனைப் பலமுறை பலமாக அடித்தது என சிறுவனை மிகக் கொடூரமாகத் துன்புறுத்தியதன் தொடர்பில் பல குற்றச்சாட்டுகளை அவர்கள் இருவரும் எதிர்நோக்குகின்றனர்.

2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 15 முதல் 22ஆம் தேதிக்குள் சுடுநீர் தயாரிக்கப் பயன்படுத்தும் மின்சாதனத்திலிருந்து சுடுநீரை அந்தச் சிறுவன் மீது குறைந்தபட்சம் நான்கு முறை அவர்கள் ஊற்றினர்.  

அந்த மின்சாதனத்திலிருந்து பெறப்படும் சுடுநீரின் வெப்பநிலை சராசரியாக 92.6 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று அறிவியல்பூர்வ பரிசோதனைகள் காட்டுகின்றன.

சிறுவன்மீது சுடுநீர் ஊற்றிய கடைசி சம்பவத்துக்குப் பிறகு சரிந்த சிறுவனை, ஆறு மணி நேர தாமதத்துக்குப் பிறகு அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அந்தக் காயங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 மணி நேரத்துக்குள் சிறுவன் உயிரிழந்தான்.

இதன் தொடர்பில் தம்பதியர் போலிசிடம் அளித்த வாக்குமூலங்களில் சில, விசாரணையின் மூன்றாவது நாளான இன்று நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டப்பட்டன.

2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி ரிட்ஸுவான் அளித்த வாக்குமூலத்தில், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சிறுவன், “சக்கிட், சக்கிட் (வலிக்கிறது எனப் பொருள்படும் மலாய் மொழிச் சொல்),” என்று கூறியதாக சொல்லப்பட்டது.

2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி அஸ்லின் அளித்த வாக்குமூலத்தில் மகனை நன்னெறிப் படுத்துவதற்காகவே அவனை அடித்ததாகக் கூறினார்.

“அவனைக் கொல்வது எனது நோக்கமாக இருந்தால் நான் எனது மற்ற பிள்ளைகளையும் கொன்றிருப்பேன். ஆனால், எனது மற்ற பிள்ளைகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். நான அவர்களை அடிப்பதில்லை,” என்றும் “ஒரு தாயாக என்னுடைய குழந்தையை நான் எப்படி கொல்வேன்,” என்றும் குறிப்பிட்டதாகச் சொல்லப்பட்டது.

அதே நாளில் அளித்த மற்றொரு வாக்குமூலத்தில், தனது செயல்கள் சிறுவனுக்கு மரணத்துக்குக் காரணமாக அமையும் என்று தெரியாது என்று அஸ்லின் குறிப்பிட்டதாகவும் சொல்லப்பட்டது.

“அவனுக்குப் பாடம் புகட்டவே விரும்பினே. எனது மற்ற பிள்ளைகளை நான் அடிக்காதபோது, அவனுக்கு நான் ஏன் இதைச் செய்ய விரும்பவேண்டும்? அனைத்துக்கும் மேலாக, அவனும் எனது மகன்தான்,” என்று அஸ்லின் சொன்னதாகவும்  நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை தொடர்கிறது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity