குழந்தையின் தலையை காரில் மோதிய ஆடவர்மீது இப்போது கொலைக் குற்றச்சாட்டு

குழந்தையின் தலையை காரின் தளத்தின்மீது மோதிய 27 வயது ஆடவர் அந்தக் குழந்தைக்கு மரணம் விளைவித்ததற்காக கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

வேண்டுமென்றே மிகக் கடுமையான காயம் விளைவித்த குற்றச்சாட்டு முகமது ஆலிஃப் முகமது யூசுஃப் எனும் அந்த ஆடவர்மீது முன்பு சுமத்தப்பட்டிருந்தது.

இறந்துபோன குழந்தையின் தாயின் ஆண் நண்பர் முகமது ஆலிஃப் என்று ஷின் மின் சீன நாளிதழ் குறிப்பிட்டிருந்தது.

இம்மாதம் 7ஆம் தேதி இரவு 10 மணியிலிருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் ஈசூன் ஸ்திரீட் 81 புளோக் 840Aயில் உள்ள பலமாடி கார்நிறுத்துமிடத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததென நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

இஸ் ஃபயாஸ் ஸயானி அகமது எனும் அந்த 9 மாதக் குழந்தை இம்மாதம் 8ஆம் தேதி இறந்துபோனதையடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு புதைக்கப்பட்டதாக அவனது குடும்பத்தாரின் ஃபேஸ்புக் பதிவுகள் குறிப்பிட்டன.

புதுப்பிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்த முகமது ஆலிஃப் தற்போது மத்திய போலிஸ் பிரிவில் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். வரும் 22ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனை, பிரம்படிகளோ விதிக்கப்படலாம்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity