புலம்பெயர் சமூகத்துக்கு மூன்று யோசனைகள்

வட்டார விரிவான பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு (ஆர்சிஇபி) என்பது நாடுகளுக்கான லாப, நட்ட கணக்கு அல்ல என்றும் உலகின் பெரியதொரு வட்டாரத்தின் மனப்போக்கையும் தரத்தையும் வடிவமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அது என்றும் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் டியோ சீ ஹின் தெரிவித்துள்ளார். 

இந்தியா போன்ற நாடுகள் பெயரளவில் இடம்பெற்றிருப்பதைக் காட்டிலும் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் எந்த நிலையில் இருக்கப்போகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கலாசார மையத்தில் நடைபெற்ற நான்காவது தெற்கு ஆசிய புலம்பெயர் மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ.

உடன்பாட்டில் இருந்து இந்தியா வெளியேறியதன் முக்கி

யத்துவம் குறித்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியைச் சேர்ந்த பாங் யீ இயன் எழுப்பிய வினாவுக்குப் பதிலளித்த திரு டியோ, இழந்த வாய்ப்பாக அது இருக்கும் என்றும் எதிர்கால வளப்பத்தின் மீது இந்தியா கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

தெற்காசிய ஆய்வுக்கழக ஏற்பாட்டில் நடைபெற்ற மாநாட்டில் கல்வியாளர்கள், வர்த்தகர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியயோருடன் மாணவர்களும் பங்கேற்றனர். மூத்த அமைச்சர் டியோ சிறப்புரை ஆற்றிய பின்னர் அவரிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பை இவர்கள் பெற்றனர்.

வட்டார விரிவான பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டுடன் தொடர்புடையது. ஆசியான் நாடுகள் உள்ளிட்ட 15 நாடுகள் உடன்பாட்டில் அங்கம் வகிக்கின்றன. இவ்வட்டாரத்திற்கான முக்கிய பங்கு என்னும் தகுதியை உயர்த்துவதுடன் உலகின் மதிப்புப் பட்டியலிலும் சிறந்த நிலையை வருங்காலங்களில் உடன்பாடு எட்டும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இதிலிருந்து விலகுவதாக இம்மாதத்தின் தொடக்கத்தில் இந்தியா அறிவித்தது. உள்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கணிப்பு உள்ளிட்ட கவலைகளை  அதற்கான காரணங்களாக இந்தியா விவரித்தது.

அது குறித்து திரு டியோ தெரிவிக்கையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கைகோத்து ஒன்றாக இவ்வட்டாரம் முன்னேற வேண்டும் என்பதை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

தெற்கு ஆசிய புலம்பெயர்ந்தோர் எவ்வாறு இவ்வட்டாரத்துக்கு உதவ முடியும் என்பதற்கு மூன்று வழிகளை அவர் பட்டியலிட்டார்.

தங்கள் நாட்டோடு சேர்த்து பிற நாடுகளின் பொருளியல் ஒத்துழைப்பையும் ஊக்கமூட்டி வளர்ப்பது முதலாவது வழி.

உள்கட்டமைப்பு மேம்பாட்டின் மூலம் தெற்கு ஆசிய நாடுகளின் தொடர்பை வலுப்படுத்துவதோடு திறன்வளர்ப்பிலும் ஈடுபட வேண்டும் என்பது அடுத்த வழி. மூன்றாவதாக, மனிதவளத்தைப் பெருக்கி இவ்வட்டாரத்துக்கு உதவுவது.

தெற்காசிய மக்கள்தொகை 2030ஆம் ஆண்டுவாக்கில் 2.1 பில்லியனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அவ்வாறு வளர்ந்தால் உலக மக்கள்தொகையின் கால் பங்கை அது வகிக்கும். அப்போது ஏராளமானோர் இளையர்களாக இருப்பர் என்றும் இவர்களை படைப்பாற்றல், உற்பத்தித்திறன் ஆகியவற்றுடன் எதிர்காலத்துக்குத் தயாராகும் ஊழியரணியாக உருமாற்றும் சக்தியாக கல்வி திகழும் என்றும் துணைப் பிரதமர் கூறினார்.