சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசு பயணக் கப்பலின் நீச்சல் குளத்தில் பத்து வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்தான்.

லங்காவியின் ‘ஸ்டார் குரூஸ் ஜெட்டி’ எனும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘ஜென்டிங் டிரீம்’ எனும் அந்தக் கப்பலில் நேற்று (நவம்பர் 18) இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

கப்பலின் நீச்சல் குளத்தில் சிறுவன் அசைவின்றிக் கிடந்ததாக ‘டிரீம் குரூசஸ்’ நிறுவனத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

கடவுச்சீட்டு தகவல்களைக்கொண்டு சிறுவன் சிங்கப்பூர் குடிமகன் என்பது உறுதிசெய்யப்பட்டது.

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார்.

“விசாரணையில் அதிகாரிகளுடன் உதவிவருவதுடன், ‘டிரீம் குரூசஸ்’ சிறுவனின் குடும்பத்தாருக்கும் தேவையான உதவிகளைச் செய்துவருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

அந்தச் சிறுவனின் பெயர் ஹெங் காய் லுன் ஆலன் என்று மலேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா குறிப்பிட்டது.

தாயார் மற்றும் நண்பருடன் அந்தச் சிறுவன் மூன்று நாள் சுற்றுப்பயணமாக அந்தக் கப்பலில் சென்றதாகக் கூறப்பட்டது.

கப்பல் சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது. நேற்று காலை மலேசியாவின் லங்காவியில் அது நிறுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான அவசர அழைப்பு நேற்றிரவு 7.30 மணிக்குக் கிடைத்ததாக பாடாங் மாட்ஸிராட் காவல் நிலையம் தெரிவித்தது.

சிறுவன் குளத்தில் மூழ்கியபோது கப்பலில் இருந்தவர்களால் காப்பாற்ற முடியாமல் போனதாக காவல் ஆய்வாளர் முகமது இக்பால் குறிப்பிட்டார்.

சிறுவனின் உடல் சுல்தானா மலிஹா லங்காவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சுமார் 3,000 பயணிகளுடன் சென்ற அந்தக் கப்பல், நேற்றிரவு 10.30 மணியளவில் புக்கெட்டுக்கு கிளம்பிச் சென்றது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பரப்பளவின்படி, இந்த பலதுறை மருந்தகம் நாட்டின் ஆகப் பெரியதாக இருக்கும் என்பதைச் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது. வரைபடம்: மரீன் பரேட் நாடாளுமன்ற உறுப்பினர் சியா கியான் பெங்கின் ஃபேஸ்புக் பக்கம்

10 Dec 2019

சிராங்கூன் ‘நெக்ஸ்’ கடைத்தொகுதிக்கு எதிரில் மாபெரும் பலதுறை மருந்தகம்

அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்தில் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இரு இயந்திர மனிதர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

10 Dec 2019

எம்ஆர்டி நிலைய பாதுகாப்புப் பணியில் இயந்திர மனிதர்கள்
நியூசிலாந்தில் மிக உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்றான ‘ஒயிட் ஐலண்ட்’ நேற்று திடீரென புகையையும் சாம்பலையும் கக்கியது. 
படம்: டுவிட்டர்/மைக்கல் ஷேட்

நியூசிலாந்தில் மிக உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்றான ‘ஒயிட் ஐலண்ட்’ நேற்று திடீரென புகையையும் சாம்பலையும் கக்கியது.
படம்: டுவிட்டர்/மைக்கல் ஷேட்

09 Dec 2019

நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு; ஐவர் உயிரிழப்பு, பலர் காயம்