தேசிய சேவையாளர் மரணம்: முதல் வாரண்ட் அதிகாரிக்கு 13 மாதச் சிறை

தேசிய சேவையாளர் மரணம்: முதல் வாரண்ட் அதிகாரிக்கு 13 மாதச் சிறை

2 mins read
b2522256-343e-4cb6-b7ba-a0fa56f5ab75
முகம்மது ஃபாரிட் முகம்மது சாலே மீது துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தில் கார்பரல் கோக்கை 12 மீட்டர் ஆழமுள்ள கிணற்றில் தள்ள 34 வயது சார்ஜென்ட் முகம்மது நூர் ஃபட்வா மஹ்முட் என்ற அதிகாரியைத் தூண்டிய குற்றம் கடந்த மாதம் நிரூபிக்கப்பட்டது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

முழு நேர தேசிய சேவையாளரின் மரணத்துக்கு இட்டுச் சென்ற செயலில் அவரது பங்குக்காக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முதல் வாரண்ட் அதிகாரியான 36 வயது முகம்மது ஃபாரிட் முகம்மது சாலேவுக்கு நேற்று 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இவர் கடந்த ஆண்டு மே 13 ஆம் தேதி நிகழ்ந்த 22 வயது கார்ப்பரல் கோக் யுயென் சின், நீரில் மூழ்கி இறந்த சம்பவத்தில் தண்டனை பெற்ற மூன்றாவது அதிகாரியாவார்.

ஃபாரிட் மீது துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தில் கார்பரல் கோக்கை 12 மீட்டர் ஆழமுள்ள கிணற்றில் தள்ள 34 வயது சார்ஜென்ட் முகம்மது நூர் ஃபட்வா மஹ்முட் என்ற அதிகாரியைத் தூண்டிய குற்றம் கடந்த மாதம் நிரூபிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த அன்று, தீயணைப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பெரும்பாலான அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையில், கார்ப்பரல் கோக்கின் தேசிய சேவை நிறைவை கேக் வெட்டிக் கொண்டாடக் கூடினர்.

பின்னர் சில அதிகாரிகள் கார்ப்பரல் கோக்கைத் தூக்கிக்கொண்டு கிணற்றுப் பகுதிக்குச் சென்றனர். அங்கு அவர் கிணற்றுக்குள் தள்ளப்பட்டார்.

விசாரணையின்போது, ​​கார்ப்பரல் கோக்கைக் கிணற்றில் தள்ளுமாறு ஃபாரிட் சொன்னதாக நூர் ஃபட்வா சாட்சியம் அளித்தார்.

நூர் ஃபட்வாவின் நடவடிக்கைகளின் விளைவாக, கார்ப்பரல் கோக் நீரில் மூழ்கினார்.

மரணம் விளைக்கும் குற்றச்செயலுக்கு உட்படாத, கண்மூடித்தனமான செயலைச் செய்ததற்காக நூர் ஃபட்வாவுக்கு 2018 அக்டோபரில் ஒரு வருடம் நான்கு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் தனது சிறைத் தண்டனையை நிறைவு செய்துள்ளார்.

தனது கைபேசியில் பதிவான அச்சம்பவத்தின் காணொளிக் காட்சிகளை நீக்கியதற்காக 2018 டிசம்பரில், 33 வயது ஸ்டாஃப் சார்ஜென்ட் அடிகாசலி சுஹைமிக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த அன்று இரவு நிலையத்திற்கு பொறுப்பான மற்ற இரண்டு அதிகாரிகள் 38 வயது லெப்டினன்ட் கென்னத் சோங் சீ பூன், முதல் மூத்த வாரண்ட் அதிகாரியான 40 வயது நஜன் முகமது நாஜி ஆகியோர் விசாரணை கோரியுள்ளனர். அவர்களின் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity