சிங்கப்பூர்-இந்திய தற்காப்பு உறவில் புதிய சகாப்தம்

சிங்கப்பூருக்கு வருகையளித்துள்ள இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னும் மனம்விட்டுப் பேசியதில் இரு தரப்பு தற்காப்பு உறவில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர்-இந்திய 4வது தற்காப்பு அமைச்சர்களின் கலந்துரையாடலையொட்டி இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் இங், 2015ல் தற்காப்பு உடன்பாடு திருத்தப்பட்ட பிறகு இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தற்காப்பு உறவு நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது என்றார்.

இதனை ஆமோதித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய-சிங்கப்பூர் தற்காப்பு உறவு புதிய யுகத்தில்  நுழையும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

மூன்று நாள் அறிமுகப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்துள்ள திரு ராஜ்நாத் சிங் முன்னதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டைச் சந்தித்தார். சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் படைத் தளங்களையும் அவர் சுற்றிப் பார்த்தார்.

இந்தியாவில் உள்ள சண்டிப்பூர் வசதிகளை ஏவுகணைச் சோத னைக்காக சிங்கப்பூர் பயன்படுத்த விருக்கிறது.

இது குறித்து பேசிய டாக்டர் இங், சிறிய நாடான சிங்கப்பூரில் ‘ஸ்டைபர்’ ஏவுகணைத் தற்காப்பு முறையை சோதிக்க முடியாது என்றார்.

சண்டிப்பூர் வசதிகளைப் பயன்படுத்த இந்தியா அனுமதித்ததற்காக அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதற்கான தற்காப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பரில் அந்தமான் கடற் கரையில் முதல் முறையாக சிங்கப்பூர்-இந்தியா-தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே நடைபெற்ற கடற்துறை பயிற்சியை ஆண்டுதோறும் தொடரவும் இரு வரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகம் மற்றும் ராணுவத்துக் காகப் பயன்படுத்தப்படும் அந்த மான் கடற்பகுதியும் மலாக்கா நீரி ணையும் அனைத்துலகப் பாதை  என்பதையே இது காட்டுவதாக திரு இங் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய-பசிபிக் உறவை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

மனிதாபிமான உதவி மற்றும் இயற்கைப் பேரிடர் மீட்பு தகவல் பரிமாற்றம், செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.