அதிகரிக்கும் டெங்கி தொற்று; இந்த மாதமும் இருவர் உயிரிழப்பு

அதிகரிக்கும் டெங்கி தொற்று; இந்த மாதமும் இருவர் உயிரிழப்பு

2 mins read
6b15a4e6-0823-4649-a013-367a297b461e
இவ்வாண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. டெங்கியால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நாட்டில் டெங்கி தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மேலும் இருவர் டெங்கி பாதிப்புக்குப் பலியாகியுள்ளனர்.

இவர்களைச் சேர்த்து இவ்வாண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. இறந்தோரின் வயது 45க்கும் 94க்கும் இடைப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. டெங்கியால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இறந்த 20 பேரில், 14 பேர் இவ்வாண்டின் பிற்பாதியில் பலியானவர்கள்.

இம்மாதம் டெங்கிக்குப் பலியான இருவரில் ஒருவருக்கு வயது 52, மற்றவருக்கு வயது 78.

அதுவும் ஒருவர், கொசு இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும் வட்டாரத்தில் வசித்து வந்தவர்.

கடந்த வாரத்தில் மட்டும் டெங்கி பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை மொத்தம் 377.

இதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 17% அதிகம்.

அத்துடன் ஐந்தாவது வாரமாக டெங்கி பாதிப்பு தொடர்ச்சியாக ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த ஆண்டும் டெங்கி சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையை எதிர்பார்க்கலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியுள்ளது.

கொசுக்களின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் சென்ற மாதம் 32% அதிகரித்துள்ளதாகவும் வீடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கொசு இனப்பெருக்க இடங்கள் கிட்டத்தட்ட 55% கூடுதலாகி இருந்ததாகவும் வாரியம் தெரிவித்தது.

டெங்கி பாதிப்புக்கு உள்ளாவோரில் ஐந்தில் ஒருவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது.

இதுவரை ஆக அதிகமான எண்ணிக்கையில் டெங்கி தொற்று சம்பவங்கள் 2013ஆம் ஆண்டில் நிகழ்ந்தன.

அந்த ஆண்டில் 22,000க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர். அவர்களில் 93 பேர், டெங்கியால் கடும் காய்ச்சலுக்கும் ஆளாகினர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்