மலேசியா - சென்னை விமானத்தில் 6 மாத குழந்தை உயிரிழப்பு

மலேசியா - சென்னை விமானத்தில் 6 மாத குழந்தை உயிரிழப்பு

2 mins read
72c6a2a6-8074-4c06-bc4a-cfb5f1b6fec9
அசைவின்றி இருந்த ஹிருத்திக்கின் உடல் நீலம்பூத்திருந்ததைப் பார்த்து உடனடியாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவ சேவை மையத்தின் உதவியை நாடினர் சக்தி முருகன் தம்பதி. படம்: ஊடகம் -

சென்னை தாம்பரம் அருகில் உள்ள வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்த 32 வயது சக்தி முருகன், 27 வயது மனைவி கீதா, ஆறு மாதக் குழந்தை ஹிருத்திக் ஆகியோருடன் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வருகிறார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இந்தத் தம்பதி தங்களது குழந்தை ஹிருத்திக்கை அழைத்துக்கொண்டு விடுமுறைக்காக இந்தியாவுக்குப் புறப்பட்டனர். கீதாவின் அம்மா பிரிட்டோ குயினும் அவர்களுடன் பயணம்செய்தார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து ஏர் ஏஷியா விமான மூலம் மலேசியா வழியாக அவர்கள் சென்னைக்குப் பயணம் மேற்கொண்டனர்.

விமானம் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கிளம்பிய பிறகு குழந்தை ஹிருத்திக்குக்கு கீதா பாலூட்டியதாகக் கூறப்பட்டது. பால்குடித்தபடியே குழந்தை தூங்கிவிட்டதால் யாரும் அவனை எழுப்பவில்லை.

நேற்று அதிகாலை வேளையில் சென்னை விமான நிலையத்தை அடைந்த அவர்கள், குடிநுழைவுச் சோதனைக்குப் பிறகு குழந்தை ஹிருத்திக்கை எழுப்ப முயற்சி செய்தனர்.

அசைவின்றி இருந்த அவனது உடல் நீலம்பூத்திருந்ததைப் பார்த்து உடனடியாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவ சேவை மையத்தின் உதவியை நாடினர் சக்தி முருகன் தம்பதி.

ஆனால், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்த பெற்றோர் விமான நிலையத்திலேயே கதறியழுதனர். ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டதிலிருந்து 13 மணி நேர விமானப் பயணத்தின்போது சிறுவன் ஆரோக்கியமாகவே இருந்ததாக பெற்றோர் குறிப்பிட்டனர்.

விமான நிலைய போலிசார் குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

பால் குடித்தபிறகு குழந்தை கண் விழிக்கவில்லை என்பதால், அநேகமாக மூச்சு திணறி இறந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. நெடுந்தூர விமானப் பயணமோ, தொற்றோகூட காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உடற்கூறு அறிக்கை வந்த பிறகே உறுதியான தகவல்கள் கிடைக்கும்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity