மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சாலை ஒன்றில் திடீரென உண்டான குழிக்குள் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த கார் விழுந்து சிக்கியது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 11.35 மணிக்கு நிகழ்ந்ததாக உள்ளூர் போலிசார் தெரிவித்தனர்.
“நாற்பத்து இரண்டு வயது பெண் ஜாலான் மகாராஜலேலா சாலையில் தனது காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது அந்தக் குழி திடீரெனத் தோன்றியது. தக்க நேரத்தில் தப்பிக்க முடியாமல் அவர் அந்தக் குழிக்குள் விழுந்தார்,” என்று துணை ஆணையாளர் ஸுல்கிஃப்லி யாஹ்யா தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் காயமின்றித் தப்பித்ததாகவும் துணை ஆணையாளர் யாஹ்யா கூறினார்.
சாலையைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.