இணையப் பொய்யுரைகள், சூழ்ச்சித்திறம் எதிரான பாதுகாப்புச் சட்டத்தை (பொஃப்மா) முதன்முறையாக அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.
இதன்படி சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி உறுப்பினரான ப்ரெட் போயருக்கு எதிராக நேற்று ‘பொஃப்மா’ அலுவலகம், திருத்த உத்தரவு விதித்தது.
திரு போயரின் ஃபேஸ்புக் பதிவு ஒன்றின் மேல்பகுதியில் திருத்தம் தொடர்பான அறிவிப்பு சேர்க்கப்படவேண்டும் என்பது உத்தரவு.
‘தெமாசிக்’, ‘ஜிஐசி’ ஆகியவற்றின் முதலீட்டு விவகாரங்களில் முடிவெடுப்பதிலும் ‘கெப்பல் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் நிதி விவகாரங்களிலும் அரசாங்கத்தின் தலையீடு இருந்து வருவதாக திரு போயர் இம்மாதம் 13ஆம் தேதியன்று தம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இத்தகவல்கள் ‘பொஃப்மா’ சட்டத்தை மீறியுள்ளதால் பதிவில் திருத்தக் குறிப்பைச் சேர்க்க ‘பொஃப்மா’ அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
“உண்மைகளைத் திரித்துத் தவறான கூற்றுகளை திரு போயரின் பதிவு கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசாங்கத்தின் மேல் பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் சிதைக்கிறது,” என்று நிதி அமைச்சு நேற்று வெளியிட்ட தனி அறிக்கை ஒன்று தெரிவித்தது.
‘பொஃப்மா’ சட்டத்தை நிறைவேற்ற இரண்டு நிபந்தனைகள் உண்டு. அதில் பொய்யுரை ஒன்று. தவறாக அல்லது ஏமாற்றும் விதமாக தகவல் கூறப்படுவதே பொய்யுரை.
பொதுமக்கள் தொடர்பான விவகாரமாக இருப்பது மற்றொரு நிபந்தனை. இதன்படி நாட்டின் பாதுகாப்பு, மற்ற நாடுகளுடன் கொண்டுள்ள நட்புறவு போன்றவை பாதிக்கப்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும்.
தமது ஃபேஸ்புக் பதிவில், ‘தெமாசிக்’, ‘ஜிஐசி’ ஆகியவற்றின் முதலீடுகளில் அரசாங்கம் சம்பந்தப்பட்டிருப்பதாக திரு போயர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொடர்பை மறுத்துள்ளது நிதி அமைச்சு.
“ஜிஐசியும் தெமாசெக்கும் வர்த்தக அடிப்படையில் இயங்குகின்றன. அவற்றின் தனிப்பட்ட முதலீட்டு முடிவுகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை. இதைப் பதிவிடுவது அவசியம்,” என்று குறிப்பிட்டது அமைச்சு.
நீண்ட கால அடிப்படையில் இரு நிறுவனங்களுக்கும் லாபம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவற்றுக்குப் பெரும் நட்டம் என்று தம் பதிவில் திரு போயர் குறிப்பிட்டிருந்தார்.
நேற்று காலையே திரு போயர் தம் ஃபேஸ்புக் பதிவில் திருத்தக் குறிப்பை வெளியிட்டார். அதனுடன் அவர் தவறாக வெளியிட்ட தகவல்களைப் பட்டியலிட்ட ஓர் அரசாங்க இணையத்தள தொடர்பும் இணைக்கப்பட்டிருந்தது.
தனி நபர்களையும் தொழில்நுட்ப நிறுவனங்களையும் ‘பொஃப்மா’ குறி வைக்கிறது.
இதன்படி இணையப் பொய்யுரைகளை அகற்றவும் திருத்தவும் அமைச்சர்களுக்கு அதிகாரம் உண்டு. அத்துடன் உண்மையல்லாத தகவல்களைப் பரப்பும் இணையத்தளங்களை முடக்கவும் முடியும்.
சட்டத்தை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படலாம். தனிநபர்களுக்குப் பத்தாண்டுகள் வரை சிறைவாசம் விதிக்கப்படலாம். துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் கொண்டு வந்த ‘பொஃப்மா’ சட்டம், பொய்ச் செய்திகள் வெளியிடப்படுவதைச் சமாளிப்பதற்காக வரையப்பட்டது.
இவ்வாண்டு மே மாதத்தில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற இச்சட்டம், அக்டோபர் 2 முதல் நடப்புக்கு வந்தது.