மனைவியைத் தாக்கிவிட்டு, ஆசைநாயகியுடன் மலேசியாவுக்குத் தப்ப முயன்ற ஆடவருக்கு 39 மாத சிறை

திருமணம், விவாகரத்து, மீண்டும் திருமணம்; கடைசியில் கொலை முயற்சி. ஆனாலும், கணவரின் தண்டனையைக் குறைக்கக் கோரி மனு அளித்தார் மனைவி.

மகனின் திருமணம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும்படி நச்சரித்த மனைவியின் மூச்சை நிறுத்த முடிவு செய்தார் 61 வயதான கோவிந்தராஜன் திருவேங்கடம் உத்திராபதி. அவர் எந்த ஒரு நிறுவனத்திலும் வேலை செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டது.

உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 32ல் உள்ள தமது வீட்டில், ‘பிளாஸ்டிக்’ பை ஒன்றை தம் மனைவியின் தலையின்மீது கவிழ்த்தி மூடிய கோவிந்தராஜன், மனைவி தரையில் சரியும்வரை அவரது கழுத்தைச் சுற்றி அந்தப் பையை இறுக்கினார்.

தம் மனைவி மயக்கமுற்ற நிலையில், ஆனால், சுவாசித்துக்கொண்டிருப்பதை உணர்ந்த கோவிந்தராஜன், மனைவியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை எடுத்துச் சென்று அதனை அடகுவைத்து, பின்னர் அந்தப் பணத்தை தனது வைப்பாட்டியுடன் சேர்ந்து செலவுசெய்தார்.

மரணம் விளைவிக்க முயற்சி செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட கோவிந்தராஜனுக்கு நேற்று (நவம்பர் 25) மூன்றாண்டுகள், மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மனைவியின் தங்கநகையையும் $300 இருந்த பணப்பையையையும் திருடிய குற்றச்சாட்டுகள் தீர்ப்பின்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

கணவரைத் தாம் மன்னித்துவிட்டதாகவும் அவரது தண்டனையைக் குறைக்குமாறும் கோவிந்தராஜனின் மனைவியான 56 வயது எல்லாப்பூர் செல்வி சந்தனத்தேவர் நீதிமன்றத்தில் மனு செய்தார். மருத்துவமனை ஒன்றில் தாதியாகப் பணிபுரிகிறார் செல்வி.

கடந்த ஏப்ரல் மாதத்தில் கோவிந்தராஜன் கைது செய்யப்பட்ட பிறகான, இந்த ஓராண்டு தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் மிகவும் கடினமான காலகட்டமாக இருந்ததாக நீதிமன்றத்தில் செல்வி குறிப்பிட்டார். கோவிந்தராஜன் தன் மீதும் பிள்ளைகள் மீது பாசமாக இருப்பார் என்று குறிப்பிட்ட செல்வி, தங்களை அவர் நன்கு பார்த்துக்கொண்டார் என்றார்.

1985ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட கோவிந்தராஜன், செல்வி தம்பதி 1990 ஆம் ஆண்டில் விவாகரத்துப் பெற்றனர். ஆனால், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் திருமணம் புரிந்துகொண்டனர்.

அவர்களுக்கு 33 வயதில் மகனும் 32 வயதில் மகளும் உள்ளனர்.

செல்வி தம்பதியின் மகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, அவர்களது மருமகள் சந்தேகிப்பதால் மகன் வீட்டில் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி மருமகளுடன் தொலைபேசியில் பேசிய திருவாட்டி செல்வி, அது குறித்து மருமகளிடம் பேசி பிரச்சினையைத் தீர்க்கும்படி கணவர் கோவிந்தராஜனிடம் கூறினார்.

மனைவி தன்னை நச்சரிப்பதாக எண்னிய கோவிந்தராஜன், சமையலறைக்குச் சென்று ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து வந்தார். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த செல்வியின் பின்புறமாக வந்த கோவிந்தராஜன், அதனை செல்வியின் தலையில் கவிழ்த்து கழுத்தைச் சுற்றி இறுக்கினார். அப்போது “செத்துப்போ. நீ வாழ்வதில் அர்த்தமில்லை,” என்று பலமுறை கோவிந்தராஜன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

மயங்கி கீழே விழுந்த செல்வியை எழுப்ப முயற்சி செய்தார் கோவிந்தராஜன். ஆனால், அவருக்கு நினைவு திரும்பவில்லை. மனைவியிடமிருந்த மதிப்புமிக்க பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார் கோவிந்தராஜன்.

மயக்கம் தெளிந்த திருமதி செல்வி, மகளை அழைத்து நடந்தவற்றைச் சொன்னார்; ஆனால் போலிசில் புகார் செய்யவில்லை.

இரவு நேர வேலைக்குச் சென்ற செல்விக்கு கழுத்திலும் அடிவயிற்றிலும் வலி அதிகரித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனை செய்த மருத்துவரிடம், வீட்டில் நடந்தவற்றைச் சொன்னார் செல்வி.

ஏழு நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் செல்வி.

இதற்கிடையே, நகைகளை $4,250க்கு அடகு வைத்த கோவிந்தராஜன், மலேசியரான தனது ஆசைநாயகி தனலட்சுமி சுப்ரமணியனுக்கு இரண்டு மூக்குத்திகள் உட்பட பரிசுப் பொருட்களை வாங்கினார். அவரிடம் $300 வழங்கினார்.

44 வயதான தனலட்சுமியுடன் மலேசியாவுக்குச் செல்லத் திட்டமிட்ட கோவிந்தராஜனை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் போலிசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் $200.50 மட்டுமே மிச்சமிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!