லீ: வலுவான பட்ஜெட்டை அரசாங்கம் உருவாக்கும்

லீ: வலுவான பட்ஜெட்டை அரசாங்கம் உருவாக்கும்

2 mins read
ed4c8f25-3d8d-4867-9679-2ecf3665a9c4
வலுவான வரவு செலவுத் திட்ட அறிக்கையை (பட்ஜெட்) தயார் செய்வதில் நிதி அமைச்சும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு உள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார். படம்: சாவ் பாவ் -

வலுவான வரவு செலவுத் திட்ட அறிக்கையை (பட்ஜெட்) தயார் செய்வதில் நிதி அமைச்சும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு உள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.

அந்த பட்ஜெட் உலக நிலவரத்திற்கு ஏற்றவாறும் சிங்கப்பூர் பொருளியலின் தேவைகளுக்குப் பூர்த்தி செய்யுமாறும் அமையும் என தமது ஐந்து நாள் அதிகாரத்துவ தென்கொரிய வருகையின் முடிவில் திரு லீ குறிப்பிட்டார்.

உலகின் பெரிய பொருளியல் நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகியவற்றின் வளர்ச்சி மெதுவடைந்து வரும் நிலையில் சிங்கப்பூரும் அதேபோன்ற நிலையில் இருந்தால் அது வியப்புக்குரியது அல்ல என்றார் அவர்.

இருப்பினும் மந்தநிலை ஏற்படுமா என்பது ஏராளமான வெளிப்புற காரணிகளைப் பொருத்தது என்றும் திரு லீ கூறினார்.

"ஆபத்துகள் விலகிவிட்டது போலத் தோன்றும். ஆனால் தற்போது சிங்கப்பூரின் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெளிவாக இல்லை. வேலையின்மை விகிதம் இன்னமும் குறைவாகவே உள்ளது.

"நிறுவன லாப விகிதம் என்பது இதற்கு முன்னர் இருந்ததைப்போல குறிப்பிடும்படியாக இல்லை. அதற்கான உந்துதல் அதிகரித்து வருகிறது. நிறுவனக் கடன்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

"இருப்பினும் வெளிப்புற நிலவரங்கள் அதிர்ச்சியைத் தரலாம். உதாரணமாக, அமெரிக்கா, சீனா வர்த்தகப் போர் நிலவரம் மோசமடைந்து அதற்குத் தீர்வு எட்டப்படாத நிலையில் நிச்சயமற்ற நிலவரம் தொடருமானால் அவ்விரு நாடுகளும் அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் மந்தநிலையை எட்டக்கூடும்.

"அவ்வாறு நிகழ்ந்தால் நாம் பெரிதாகப் பாதிக்கப்படுவோம். பொருளியல் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் அப்போது கைகொடுக்கும் என்று நான் கருதவில்லை.

"அதற்குப் பதிலாக, பொருளியல் மெதுவடையும் சூழ்நிலையை திறன் மேம்பாடு, ஊழியர் பயிற்சி, உற்பத்தித்திறன் வளர்ச்சி போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்,

"சந்தை நிலவரம் சாதகமின்றி தொடரலாம். பெரும் பிரச்சினைகள் சூழக்கூடிய நிலையில் யாரும் எந்தவொரு கடப்பாட்டையும் செய்ய விரும்பமாட்டார்கள்.

"அதேநேரம் பிரெக்சிட் நிலவரம் என்னவாகிறது என்பதிலும் அமெரிக்கா, சீனா இடையிலான விவகாரம் என்ன நிலைமையில் உள்ளது என்பதிலுமே கவனம் இருக்கும்.

"ஜப்பான், கொரியாவை உள்ளடக்கிய வட்டாரம்கூட ஆபத்தில் சிக்கலாம்," என்றார் பிரதமர்.