'பிஎஸ்எல்இ' மதிப்பெண் பட்டியலின் நகல் மட்டும் கொடுத்த விவகாரம்: 'உதவி கோரியிருக்கலாம்'

'பிஎஸ்எல்இ' மதிப்பெண் பட்டியலின் நகல் மட்டும் கொடுத்த விவகாரம்: 'உதவி கோரியிருக்கலாம்'

2 mins read
558c4278-82ed-4a3c-9be0-8e8d604f9293
மாணவி ஒருவருக்கு அவரின் பிஎஸ்எல்இ முடிவுகளைக் கொண்ட ஆவணத்தின் நகல் மட்டுமே தரப்பட்டதை அறிந்த வேலைத்தொழில் ஆலோசகரும் ஆர்வலருமான கில்பெர்ட் கோ, இது குறித்து தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பள்ளிக் கட்டணத்தைக் கட்டத் தவறினால் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (எஸ்எல்இ) முடிவின் அசலை மாணவருக்குக் கொடுக்காமல் இருப்பது நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு வழக்கம் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.

வேலைத்தொழில் ஆலோசகரும் ஆர்வலருமான கில்பெர்ட் கோவின் ஃபேஸ்புக் பதிவு, இணையத்தில் பரவலாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டு, பெரும் சர்ச்சைக்குரியதாகி உள்ளதைத் தொடர்ந்து கல்வி அமைச்சு நேற்று இவ்வாறு பதிலளித்திருந்தது.

கடந்த வியாழக்கிழமை பிஎஸ்எல்இ முடிவுகள் வெளிவந்தன. ஆனால் மாணவி ஒருவருக்கு அவரின் பிஎஸ்எல்இ முடிவுகளைக் கொண்ட ஆவணத்தின் நகல் மட்டுமே தரப்பட்டதை அறிந்த திரு கோ, இது குறித்து தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

பண நெருக்கடியால் மாணவியின் பள்ளிக் கட்டணமான $156ஐ அவரின் குடும்பத்தார் கட்டத் தவறினர்.

பலமுறை பள்ளிக் கட்டணத்தைக் கட்டுமாறு ஈராண்டு காலமாகப் மாணவியின் பெற்றோருக்கு நினைவூட்டப்பட்டும் அவர்கள் கட்டவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

அத்துடன் கல்வி அமைச்சையோ பள்ளி சார்ந்த நிதியுதவியையோ மாணவியின் குடும்பத்தார் நாடும் வகையில் எந்த விண்ணப்பமும் செய்யவில்லை என்றும் அவ்வாறு செய்திருந்தால் உதவி கிடைத்திருக்கும் என்றும் அமைச்சு விளக்கம் அளித்தது.

"மாணவிக்கு முடிவுகளின் அசல் ஆவணத்திற்குப் பதிலாக அதன் நகல் தரப்படும். நகலைக் கொண்டு மாணவியால் உயர்நிலைப் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். மற்ற மாணவர்களைப் போலவே அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்," என்றது அமைச்சு.

தேர்வு முடிவின் நகலைப் பெற்றுக்கொள்வது 'வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது' என்று திரு கோ தம் பதிவில் குறிப்பிட்டிருந்தார். வறுமையில் வாடும் குடும்பத்திற்கு அவர்களின் நிலையைச் சுட்டிக்காட்டி மேலும் வேதனை அளிப்பதாக உள்ளது என்றார்.

"பெயர் குறிப்பிடா நல்லுள்ளம் கொண்ட ஒருவர், நிலுவையில் இருந்த மாணவியின் பள்ளிக் கட்டணத்தைக் கட்டியதால் மாணவிக்கு தேர்வு முடிவின் அசல் ஆவணம் கிடைத்துவிட்டது. அசல் இருந்தால் மட்டுமே உயர்நிலைப் பள்ளியில் சேர்வதற்காக விண்ணப்பிக்க முடியும்," என்ற தகவலை திரு கோ கூறியிருந்தார்.

ஆனால் உயர்நிலைப் பள்ளியில் ஓர் இடத்தைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும்போது அசல் சான்றிதழ்கள் தேவையில்லை என்று கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியது.

இதுவரை திரு கோவின் ஃபேஸ்புக் பதிவு 3000க்கும் மேலாக பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் கிட்டத்தட்ட 1,000 கருத்துகளையும் பெற்றுள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity