இன்னொரு வெளிநாட்டு ஊழியரும் மரணம்; வேலையிட உயிரிழப்பு மாதமான நவம்பர்

ஆங்கிலோ சீனப் (பார்க்கர் ரோடு) பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கிய வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, இந்த மாதம், வேலையிடங்களில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) காலை 10.30 மணியளவில் பள்ளிக் கட்டடத்தில் உள்ள செங்கல் சுவருக்கு அருகில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தார் 38 வயதான பங்ளாதேஷ் ஊழியர் ரிப்பான். அந்த சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார் திரு ரிப்பான்.

டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், காயங்களின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) உயிரிழந்தார்.

திரு ரிப்பான் பணிபுரிந்த ‘எச் பி கன்ஸ்ட்ரக்‌ஷன் & இன்ஜினியரிங் நிறுவனம்’ அந்த வேலையிடத்தில் பணிகளைச் செய்து வருவதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. அந்த மேம்பாட்டுப் பணிகளைக் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இடிந்து விழுந்த சுவருக்கு அருகில் வேலை நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மனிதவள அமைச்சின் பேச்சாளர், இந்தச் சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாகச் சொன்னார்.

சம்பவ இடத்திலிருந்து சுயநினைவற்ற நிலையில் அந்த ஊழியர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் குறிப்பிட்ட போலிஸ் பேச்சாளர், விசாரணை தொடர்கிறது என்றார்.

ஆங்கிலோ சீனப் பள்ளி (தொடக்கப்பள்ளி)யில் மேம்பாட்டுத் திட்டத்தின் அங்கமாகக் கட்டப்படும் புதிய புளோக்கில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். அந்தப் பகுதிக்கு பள்ளி மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.

அந்தப் பகுதியில் மாணவர்களுக்கான எந்த நடவடிக்கையும் தற்போது இடம்பெறவில்லை என்று ஏசிஎஸ் பார்க்கர் பள்ளி, ஏசிஎஸ் தொடக்கப்பள்ளி ஆகியவற்றின் முதல்வர்கள் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

கல்வி அமைச்சுடனும் ஒப்பந்ததாரர்களுடனும் இணைந்து பணியாற்றி, கட்டடங்கள் முற்றிலும் பாதுகாப்பானவைதானா என்பது உறுதிப்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திரு ரிப்பானின் மரணம் மிகுந்த வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட வெளிநாட்டு ஊழியர் மையத்தின் தலைவர் இயோ குவாட் குவாங், இறந்துபோனவரின் குடும்பத்தாருக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகச் சொன்னார்.

அண்மையில் நிகழ்ந்துள்ள வேலையிட மரணங்களால் கவலையுற்றிருப்பதாக மையம் தெரிவித்தது. கட்டுமானம் போன்ற அதிக அபாயகரமான துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்குமாறு நிறுவனங்களை திரு இயோ கேட்டுக்கொண்டார்.

“நிதி உதவியும் அனுதாபங்களும் மனித உயிருக்கு ஈடாகமாட்டா. அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பணிபுரிந்து வேலையிட மரணங்கள் நிகழாமல் இருக்க ஆவன செய்ய வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் நான்காம் தேதி நொவீனாவில் உள்ள கட்டுமானத் தளத்தில் 28 வயது இந்திய ஊழியர் பார்ந்தூக்கி உடைந்து விழுந்ததில் பலியானார். அந்தச் சம்பவத்தில் 35 வயது பங்ளாதேஷ் ஊழியரும் காயமடைந்தார்.

இம்மாதம் 14ஆம் தேதி ஷா பிளாசாவில் உள்ள வேலையிடத்தில் 30 வயது இந்திய நாட்டவர், முதல் தளத்திலிருந்து கீழ்த் தளத்துக்கு பிரிப்புப் பலகையின் வழியாக விழுந்து பலியானார்.

இம்மாதம் 22ஆம் தேதி செங்காங் கட்டுமானத் தளத்தில் 37 வயது பங்ளாதேஷ் ஊழியர் இரும்புத் தடுப்புகளுக்கிடையில் சிக்கி உயிரிழந்தார்.

திரு ரிப்பானின் மரணம் இந்த மாதத்தில் நிகழ்ந்த நான்காவது வேலையிட மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!