பயணத்துக்கிடையே பணத்தட்டுப்பாடு; மனிதநேயத்துடன் உதவிய எஸ்எம்ஆர்டி ஊழியர் மோகன்

அண்மையில் வேலையிழந்த ஒற்றைப் பெற்றோரான ஆடவர்  ஒருவர் தமது இரண்டு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது அவருக்குப் பணத் தட்டுப்பாடு உண்டானது.

அதனைக் கண்ட எஸ்எம்ஆர்டி ரயில் நிலைய மேலாளரான திரு மோகன், தாமாகவே முன்வந்து ஆறுதல்மொழிகள் கூறியதுடன் $100ஐ அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பி உள்ளார்.

இந்தச் சம்பவத்தை திரு கேலப் என அறியப்படும் ஸ்டோம்ப் வாசகர் விவரித்துள்ளார். திரு மோகனிடமிருந்து ஆறுதலையும் பணத்தையும் தாம் பெற்றுக்கொண்டதாக திரு கேலப் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது ரயில் நிலையத்தில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து நிலைய ஊழியர்களை அணுகினார் திரு கேலப்.

அவருடன் பேச்சுக்கொடுத்த திரு மோகன், வளர்ந்த பிள்ளைகளுக்குத் தந்தையான தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். 

வாழ்க்கை மிகவும் குறுகியது என்றும் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்ட திரு மோகன், பல சிரமங்களுக்கிடையே பிள்ளைகளை வளர்ப்பதன் பலனை திரு கேலப் பிற்காலத்தில் பெறலாம் என்ற ஆறுதலையும் தெரிவித்தார்.

திரு கேலப் அவ்விடத்தை விட்டு அகன்று செல்வதற்கு முன்பாக தனது இருக்கைக்குச் சென்ற திரு மோகன், தனது பணப்பையிலிருந்து $100 எடுத்து வந்து திரு கேலப்பிடம் அன்பளிப்பாகக் கொடுத்தார்.

பணத்தைத் தமக்குக் கொடுத்ததற்காக இதனைப் பதிவிடவில்லை என்று குறிப்பிட்ட திரு கேலப், திரு மோகனின் உன்னதமான குணத்தைப் பாராட்டவே  இதனைத் தெரிவித்ததாகவும் தனது பதிவில் குறிப்பிட்டார்.

இதனை அறிந்து, திரு மோகனை நேரில் சந்தித்த ‘ஸ்டோம்ப்’ செய்திக் குழு, அவருடைய அன்புள்ளத்தைப் பாராட்டி ஒரு ‘ஸ்டோம்ப்’ பையை அன்பளிப்பாகக் கொடுத்தது.

திரு கேலப் தம்முடனான செய்தியை வெளியிட்டதை அறிந்து ஆச்சரியமடைந்த திரு மோகன், “கேலப்பின் கதை என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துவிட்டது,” என்றார்.

நிலைமை சீரடையும் என்றும் வருத்தப்பட வேண்டாம் என்றும் திரு கேலப்பிடம் ஆறுதல் கூறியதாக திரு மோகன் குறிப்பிட்டார்.

“கேலப் தமது இரண்டு பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளும் அற்புதமான பணியை அவர் செய்து வருகிறார்,” என்று பெருமிதம் பொங்கக் கூறினார் திரு மோகன், 68.

26 ஆண்டுகளாக எஸ்எம்ஆர்டியில் பணிபுரியும் திரு மோகன், சிரமப்படுபவர்களைக் காண்பதில் இது முதல்முறையல்ல என்றார்.

திரு கேலப்புக்கு தான் மட்டுமல்ல; யாராக இருந்தாலும் உதவியிருப்பார்கள் என மிகவும் தன்னடக்கத்துடன் கூறும் திரு மோகன், “மனிதநேயத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்றார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

Loading...
Load next